india

img

பார் கவுன்சிலின் அனுமதியின்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய ஆதிஷ் அகர்வாலா!

தேர்தல் பத்திரங்கள் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, பார் கவுன்சிலின் அனுமதியின்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாக அந்த அமைப்பின் செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.  
தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு எதிராக ஏ.டி.ஆர் அமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் தேர்தல் பத்திர நடைமுறை சட்டவிரோதமானது; அதனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திரங்களை விற்பதை உடனடியாக நிறுத்தவும், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களையும், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும், எஸ்.பி.ஐ வங்கிக்கும், எஸ்.பி.ஐ வங்கி அளிக்கும் விவரங்களை மார்ச் 13-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இதைத் தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ கடந்த மார்ச் 4-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், அனைத்து விபரங்களையும் மார்ச் 12-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவும், மார்ச் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டுமென  உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், வழக்கை மீண்டும் விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஆதிஷ் அகர்வாலா குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, பார் கவுன்சிலின் அனுமதியின்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாக அந்த அமைப்பின் செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.