திருநர்கள் சட்டத் திருத்த மசோதா-2026ஐ உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற ஆலோசனைக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பன்முகத்தன்மையையும், விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமைகளையும் நசுக்கும் செயலை தொடர்ந்து செய்து வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் "திருநர்கள் உரிமை பாதுகாப்புச் சட்டம் 2026” என்கிற பெயரில் கொண்டு வந்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டத் திருத்தங்கள் இந்த உரிமையை பறிப்பதோடு, திருநர்களின் உணர்வுகளை கணக்கில் கொள்ளாமல் அதை ஒரு "அரசுச் சான்றிதழ்" தரும் சடங்காக மாற்ற முயற்சிக்கிறது. ஒரு நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது மருத்துவக் குழுவிடமோ உறுதி செய்ய வேண்டும் என்கிறது இச்சட்டம்.
இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆலோசனைக் குழு, திருநர்கள் சட்டத் திருத்த மசோதா-2026ஐ உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.
திருநர்களின் சுய-அடையாள உரிமையை பறிக்கும் வகையில் மருத்துவ சான்றிதழை கட்டாயமாக்கும் இந்த மசோதா, 2014இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய NALSA தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
