நாடு முழுவதும் இன்று (மார்ச் 19) நடைபெறவிருந்த உதவி லோகோ பைலட் பதவிக்கான இரண்டாம் கட்டத் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. முதல்கட்ட தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில், சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் கீழ் 6,315 பேர் தேர்ச்சி பெற்றனர். இதை தோடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 19 மற்றும் 20 தேதிகளில் தேதிகளில் நடைபெறம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழக தேர்வர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டது. இந்த சூழலில், தமிழக தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் எம்.பி-க்கள் சு.வெங்கடேசன் மற்றும் ஆர்.சச்சிதானந்தம் ஆகியயோர் குரல் கொடுத்தனர். ஆனால் ரயில்வே தேர்வு வாரியம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று (மார்ச் 19) ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு நடைபெற இருந்தது. தேர்வு தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதனால், பிற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதச் சென்ற தேர்வர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.