புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் மரணமடைந்ததற்கு, மோடி அரசும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் ராணுவ தளபதி சங்கர் ராய் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இது தொடர்பாக, தி வயர்’ இணையதள பத்திரிகைக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அளித்த பேட்டியில், புல்வாமா தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர், ராணுவ வீரர்களை அழைத்து செல்வதற்கு சி.ஆர்.பி.எஃப் சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் விமானம் கேட்டபோது, உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி வழங்காததால்தான், வீரர்கள் சாலை வழியாக சென்றார்கள்; வீரர்கள் சென்ற பாதையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை; இதன் விளைவாக, புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த பிறகு, உள்துறை அமைச்சகத்தின் அலட்சியத்தால் தான் புல்வாமா தாக்குதல் நடந்தது என்பதை பிரதமர் மோடியிடம் கூறியபோது, இதைப் பற்றி பொதுவெளியில் பேச வேண்டாம் என்று மோடி கூறியதாக சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் மரணமடைந்ததற்கு, மோடி அரசும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் ராணுவ தளபதி சங்கர் ராய் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், எப்பொழுதும் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய சாலை வழியாக சிஆர்பிஎஃப் வீரர்கள் செல்லாமல் விமானம் மூலம் ஸ்ரீநகருக்குச் சென்றிருந்தால், இந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.