மணிப்பூர் பாலியல் வன்முறை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கக் கோரியும், இது தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தியும் I-N-D-I-A கூட்டணி எம்.பி-க்கள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 2 நாட்கள் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறைகள் குறித்தும் விவாதம் நடத்தக்கோரியும், பிரதமர் மோடி இவ்விவாதத்தில் பங்கேற்று பதிலளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே இன்று காலை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.