புதுதில்லி, டிச. 4 - வங்கிகளில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துவதற்காக, வழக்கம் போல ‘வங்கிச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் புதிய சட்டத்திருத்தம் ஒன்றை, ஒன்றிய பாஜக அரசு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது.
வங்கித் துறையின் நிர்வாக தரநிலைகளை உயர்த்துதல், வங்கிகளில் பணம் செலுத்துவோர் மற்றும் முதலீட்டாளர்களின் பாது காப்பை மேலும் வலுப்படுத்துதல், பொதுத்துறை வங்கிகளின் தணிக்கை தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவையே இந்த மசோதாவின் நோக்கம் என்று ஒன்றிய பாஜக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மசோதா மூலம் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள், பொதுத்துறை வங்கிகளை படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியின் தொடர்ச்சியே என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேலும், பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை தராமல், கார்ப்பரேட் நலன்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமர்சி த்துள்ளன. ஐந்து முக்கிய வங்கிச் சட்டங்களில், 19 மாற்றங்களை மோடி அரசு செய்துள்ளது.
இயக்குநர்களுக்கான நிதிச் செல வினங்கள் 40 மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. இது, பதவிக்காலம் நீட்டிப்பு மற்றும் அதிகார மையங் களை உருவாக்கும். அதேபோல தணிக்கையாளர் ஊதியத்தை வங்கி நிர்வாகமே நிர்ணயித்துக் கொள்ள லாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் தனிநபர் நலன்களுக்கு சாதகமானதே ஆகும். கிராமப்புற வங்கிச் சேவைகள் குறையும் என்பதுடன், இனிமேல் சிறு வணிகர்கள் வங்கிக் கடன் பெறுவது கடினமாகும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை பதிவு செய்தன. ஆனால், அவற்றைப் புறந்தள்ளி தனியார்மயத்திற்கான புதிய சட்டத்திருத்தத்தை மோடி அரசு நிறைவேற்றிக்கொண்டுள்ளது.
நாட்டின் நிதி இறையாண்மையை
முதலாளிகளுக்கு காவு கொடுப்பதா?
ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம்
வங்கி சட்டத் திருத்த மசோதா-2024 மீதான விவாதத்தில் பங்கேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் பேசிய தாவது:
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்- 1949; ரிசர்வ் வங்கிச் சட்டம்- 1934; இந்திய ஸ்டேட் வங்கிச் சட்டம்- 1955; வங்கி நிறுவனங்கள் கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றச் சட்டம்- 1970; வங்கி நிறுவனங்கள் கையகப்படுத்துதல் சட்டம்- 1980 ஆகிய சட்டங்களை ‘வங்கிச் சட்டத் திருத்த மசோதா- 2024’ திருத்த முயல்கிறது.
அதிகபட்ச உயர்வு
1. வங்கி இயக்குநர்களுக்கான குறைந்தபட்ச செலவின வரம்பை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 2 கோடியாக உயர்த்த முயல்கிறது. ஆனால்,இது மிக அதிகம். விலை உயர்வு மற்றும்பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, இதைரூ. 50 லட்சமாக மட்டுமே உயர்த்தலாம்.
2. கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த சட்டத்திருத்தம் முயல்கிறது. இது தனிநபர் நலன்களுக்கு வழிவகுக்கும். எனவே பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாகக் குறைக்கலாம்.
3. அறிக்கை சமர்ப்பிக்கும் தேதிகளை மாற்றும்முயற்சியைப் பொறுத்தவரை, இது ஏற்றுக்கொள்ளத்தக்கது.வாடிக்கையாளர்களுக்கு பயன்பட வேண்டும்
4. லாக்கர் நியமனம் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு நியமனதாரர் அல்லது கூட்டு நியமனதாரருக்குப் பதிலாக, ஒன்றன்பின் ஒன்றாக 4 நியமனதாரர்களை நியமிக்க சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
5. டிவிடெண்டுகள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் மீட்பு தொடர்பான தொகைகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மாற்றுவது குறித்த திருத்தத்தைப் பொறுத்த வரை, இந்த மாற்றத்திற்குப் பிறகு கோரிக்கைகள் எளிதாக்கப்பட வேண்டும். மேலும், மாற்றப்படும் தொகை வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கல்வி யளிப்பதற்கும், அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கும் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளின் தணிக்கையா ளர்களுக்கான ஊதியம் குறித்த முடிவெடுக்கும் அதிகாரத்தை மாற்றும் முயற்சியானது, பொதுத் துறை வங்கிகளின் உயர் நிர்வாகத்தின் தனிநபர்நலன்களுக்கே உதவும். இந்த அம்சம் மாற்றப்படக்கூடாது. தற்போதைய முறையிலேயே தொடர வேண்டும்.
கவலை தரும் விஷயங்கள்
தனியார்மயமாக்கல் காரணமாக ஆயிரக் கணக்கான பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். இந்த மசோதா அவர்களின் கவலைகளைக் களைய வில்லை. அரசாங்கம் வேலைவாய்ப்பு நிலைத்தன்மைக்கு முன்னுரிமை கொடுக்காமல், தனியார்மயமாக்கலுக்கும் பெருநிறுவன நலன்களுக்கும் முக்கி யத்துவம் அளிக்கிறது. இது வங்கித்துறை யின் நிலைத்தன்மையை பாதிக்கும், நிதி உள்ளடக்கத்தைக் குறைக்கும், முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கும்.
அரசாங்கம் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து, பொதுத்துறை வங்கி அமைப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தனியார்மயமாக்கலுக்காக நாட்டின் நிதி இறையாண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.