india

img

மோடி அரசாங்கத்தின் ஒரே நாடு, ஒரே தேர்தல் முடிவினை எதிர்த்திடுவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

மோடி அரசாங்கத்தின் ஒரே தேசம், ஒரே தேர்தல் முடிவினை நாட்டின் ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்புமுறையை அரித்தி வீழ்த்திடும் ஒவ்வொரு கட்சியும் ஒன்றுபட்டு நின்று எதிர்த்து முறியடித்திட முன்வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சரவை, நாடாளுமன்றம், சட்டமன்றப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக கோவிந்த் குழு அளித்திட்ட பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்பட்டால், அது நாடாளுமன்ற ஜனநாயக  அமைப்பு முறையையும், கூட்டாட்சி அமைப்புமுறையையும் அரித்து வீழ்த்திடும்.

மக்களவைக்கான தேர்தலுடன் நடத்த வேண்டும் என்பதற்காக சில சட்டமன்றங்களின் ஆயுளைக் குறைக்கும் விதத்தில் இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளன. மேலும், ஒரு மாநில அரசு கவிழ்ந்து, சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டுமென்றால், இடைக்காலத் தேர்தல் நடத்தப்படும் என்பது சட்டமன்றத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமேயாகும். அவை அனைத்தும் அரசமைப்புச்சட்டத்தின்படி ஐந்தாண்டு காலத்திற்கு மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை மீறுகின்றன. மேலும் எஞ்சியிருக்கும் காலத்திற்கு மட்டும் பேரவைக்கு இடைக்காலத் தேர்தலை நடத்த வேண்டும் என்கிற பரிந்துரை புதிய திட்டத்தின் நோக்கத்தையே தோற்கடிக்கிறது. இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் ஐந்தாண்டு பதவிக் காலம் முடிவடைந்ததும் மீண்டும் ஒரு தேர்தல் நடத்த வேண்டியிருக்கும்.

அனைத்துப் பஞ்சாயத்துகளுக்கும், நகர்மன்ற அமைப்புகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்தின்மீது நயவஞ்சகமான முறையில் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலேயாகும். உள்ளாட்சி அமைப்புகள் முடிவெடுக்கும் அதிகாரங்களைக்கூட ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும் அதீத நடவடிக்கையாகும் இது.

உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்கள் நடத்துவது என்பது அந்தந்த மாநில அரசுகளின் நோக்கத்திற்கு உட்பட்டவையாகும். அதனையும்கூட ஒன்றிய அரசாங்கம் பறித்துக்கொள்ளும் விதத்தில் இந்த முடிவினை எடுத்திருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாறுபட்ட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தோமானால் இது ஓர் அபத்தமான முடிவு என்பது தெரியவரும்.

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்னும் கருத்தாக்கம் ஆர்எஸ்எஸ், பாஜக வகையறாக்களின் சிந்தனையில் உருவானது. இது ஒரே தலைவரின்கீழ் ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசையே உருவாக்க விரும்புகிறது.

இந்த நோக்கத்திற்காக அரசமைப்புச்சட்டத்தைத் திருத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக எதிர்த்திடும்.

ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தினை மதித்திடும் ஒவ்வொரு கட்சியும், ஒன்றுபட்டு நின்று, இந்தக் கேடுகெட்ட நடவடிக்கையை எதிர்த்து முறியடித்திட முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.