இடதுசாரி கட்சிகளின் கூட்டு கூட்டம் தில்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமை அலுவலகமான அஜாய் பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்-லிபரேஷன்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் தர்மேந்திர வர்மா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நாட்டில் மக்கள் சந்திக்கும் பல முக்கிய பிரச்சனைகளின் மீதான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மிகவும் அவசியமானது என இடதுசாரி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.