முஸ்லிம்கள் குறித்து வெறுப்புப் பேச்சை நிகழ்த்திய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ்வை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டுவர மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் அலகாபாத் நீதிமன்றத்தின் நீதிபதி சேகர் குமார் யாதவ், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விஷ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பொது சிவில் சட்டம் குறித்து பேசுகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வது, முத்தலாக் சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் இனி செல்லுபடியாகாது என்று இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
மேலும், இந்துக்கள் குழந்தைகளுக்கு அன்பு, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை போதிக்கிறதாகவும், விலங்குகள், இயற்கையை நேசிக்க கற்றுத்தருகிறதாகவும், முஸ்லிம்கள் அப்படி இல்லை. அவர்கள் குழந்தைகள் கண் முன்னால் விலங்குகளை வெட்டினால், எப்படி அவர்கள் அன்பு, சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொள்வார்கள் என வெறுப்பை தூண்டும் வகையில் நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியிருந்தார்.
சேகர் குமார் யாதவின் இந்த பேச்சுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அவரது பேச்சுக்கு உச்சநீதிமன்றமும் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ்வை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டுவர வலியுறுத்தி, 55 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸை மாநிலங்களவை செயலாளரிடம் இன்று எம்.பி-க்கள் வழங்கினர்.