கிரெடிட் ஸ்கோர் இல்லாததால், ஐபிபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனத்தை வங்கிகள் ரத்து செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்த சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் இது அப்பட்டமான அநீதி என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"கிரெடிட் ஸ்கோரால் பணி நியமனம் ரத்தா? இது அப்பட்டமான அநீதி!
போதுமான சிபில்/கடன் வரலாறு இல்லாத காரணத்தால், கடந்த 3 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் தேர்வெழுதி தகுதிபெற்ற தேர்வர்கள் 20 பேரின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது - இதில் எஸ்பிஐ வங்கியில் மட்டும் 11 பேரின் பணி நியமனங்கள் ரத்து!!
'பொருளாதார வலிமையற்ற நிலை' காரணமாக தகுதிபெற்ற தேர்வர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கல்வி அல்லது மருத்துவக் கடன்களைப் பெற்றிருந்தும், வேலைவாய்ப்பின்மையால் உரிய தேதிகளில் அவற்றைத் திருப்பிச் செலுத்த சிரமப்படும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தவர்களை இது பாதிக்கிறது.
அரசுப் பணியில் இருந்து ஒருவர் நியாயமற்ற முறையில் நீக்கப்படுவதே ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருக்கும்போது 20 பேரின் நீக்கம் என்பதை நியாயப்படுத்த முடியாது.
இது ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. பொதுவான ஆட்சேர்ப்பு நடைமுறையில், சமூக-பொருளாதாரப் பின்னணியை சத்தம் இல்லாமல் ஒரு வடிகட்டியாக மாற்றுவது, அரசுப் பணியில் சம வாய்ப்புக்கான அரசியலமைப்பு வாக்குறுதியைச் சிதைப்பதாகும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
