காஷ்மீர் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இதனால் தற்போது காஷ்மீர் பிரச்சனை உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீரில் ஏற்கனவே இந்திய ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அஹமது மீர் ஆகியோர் ஸ்ரீநகர் மக்களை சந்திக்க திட்டமிட்டனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று ஸ்ரீநகர் சென்றடைந்தார். ஆனால் ஸ்ரீநகர் விமானம் நிலையத்திலேயே, அவர்கள் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.