india

img

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்பு ஒரு ஜனநாயக படுகொலை - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!

அணுக் கனிமங்கள், முக்கியக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களுக்கு இனிமேல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படாது என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருப்பதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
அணுக் கனிமங்கள், முக்கியக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களுக்கு இனிமேல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படாது என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வேதாந்தா குழுமத்திற்கு வழங்கியதைக் கண்டித்து மதுரை மக்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தோம். நாடாளுமன்றத்திலும், நிலைக்குழுவிலும் இப்போராட்டம் தொடர்ந்தது. 
அதனடிப்படையில் ஜனவரி 24, 2025-இல் இந்த ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்திருந்தது. 
இப்போது டங்ஸ்டன் உள்ளிட்ட முக்கியக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதிலிருந்து ஒன்றிய அரசு விலக்களித்துள்ளது. மேலும் இதுபோன்ற திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பங்களை ஒன்றிய அரசே பரிசீலித்து வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்கள் குறித்துப் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறுவது மிக அவசியமானதாகும். அத்தகைய ஜனநாயக நடைமுறையை முடக்குவது சட்டவிரோத நடவடிக்கையாகும். 
கனிமங்களை அரியவகை கனிமங்கள் என்று பட்டியலிட்டு அதனை ஏலம் விடும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறித்த மோடி அரசு இப்பொழுது சுற்றுச்சூழல் அனுமதிக்கான உரிமையையும் பறித்துள்ளது.
இந்தியாவின் கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கவே பா.ஜ.க. அரசு இதைச் செய்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய ஒன்றை வெறும் அலுவல் உத்தரவு மூலமாக நடைமுறைப்படுத்துவது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறும் எதேச்சதிகார செயலாகும். 
மோடி அரசு தனது பெருமுதலாளித்துவ நண்பர்களுக்காக ஜனநாயக நடைமுறையை, மாநில உரிமையை, நாடாளுமன்ற உரிமையை சிதைக்க முயல்வது முதல் முறையல்ல. அரியவகை கனிமங்களையும், அதனினும் முக்கியமான இந்திய ஜனநாயக அடிப்படையையும் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
பெரும் கார்ப்ரேட்டுகளின் மீது மோடி அரசுக்கு இருக்கும் விசுவாசத்திற்கு ஜனநாயகச் சட்டங்களையும், மாநில உரிமைகளையும் பலிகொடுப்பதை ஏற்க முடியாது.  ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் இவ்வுத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.