சமூக ஆர்வலர் கொமடோர் லோகேஷ் பத்ரா ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி.ஐ, நாடு முழுவதும் 2018 முதல் இதுவரை ரூ.15,956 கோடிக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு நிதி மசோதாவுடன் தேர்தல் பத்திரத்தை அறிமுகப்படுத்திய பாஜக கூட்டணி அரசு 2018-ஆம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது தேர்தல் பத்திரங்களை வாங்க கருப்புப்பணத்தை பயன்படுத்துவதை அரசு கண்காணிக்கும் என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு செய்யப்படவில்லை.பத்திரத்தை வாங்குபவரோ அல்லது பெறுபவரோ யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது என்பதால் நன்கொடையாளரின் அடையாளம் மறைக்கப்படுகிறது.
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுவதை தடை செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் கொமடோர் லோகேஷ் பத்ரா தேர்தல் பத்திரங்கள் குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி.ஐ, நாடு முழுவதும் 2018 முதல் இதுவரை ரூ.15,956 கோடிக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நன்கொடை வழங்குவோரிடம் எந்த கட்டணமும் வசூலிக்காமல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்த எஸ்.பி.ஐ வங்கி, கமிஷன், அச்சடிப்பு மற்றும் இதர செலவினங்களுக்காக ஒன்றிய அரசுக்கு ரூ.13.50 கோடி கட்டணம் விதித்துள்ளதும் தெரியவந்துள்ளது.