india

img

இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் - சிபிஎம் வரவேற்பு

இந்தியா-சீனா உறவில் ஏற்பட்டுள்ள முன்னெற்றத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31-08-2025) துவங்கியுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இருதரப்பு உறவுகளை மறுவடிவமைக்க விரிவான பேச்சு வார்த்தைகளை நடத்தினர். இது கடந்த பத்து மாதங்களில் இரு தலைவர்களின் முதல் சந்திப்பாகும். “பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்வு பூர்வமான அணுகுமுறையின் அடிப்படையில் நமது உறவுகளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் உறுதியளிக்கிறோம்,” என பிரதமர் மோடி சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தார். எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, பகுத்தறிவுபூர்வமான மற்றும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண இரு தலைவர்களும் உறுதியளித்தனர். இந்த நிலையில், இந்தியா-சீனா உறவில் ஏற்பட்டுள்ள முன்னெற்றத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“இந்தியா-சீனா உறவில் ஏற்பட்டுள்ள முன்னெற்றத்தை வரவேற்கிறோம். எல்லைகளை நிர்வகிக்கும் ஒப்பந்தம், கைலாஷ் மன்சோரவர் யாத்திரை மீண்டும் தொடக்கம், நேரடி விமான சேவை ஆகியவை வரவேற்கத்தக்க அம்சங்கள்.  இந்தியா- சீனா அரசாங்க உறவுகள் ஏற்பட்ட 75ஆவது ஆண்டில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மற்றும் பெருமைமிக்க புராதன நாகரிகங்கள் கொண்ட இரு பெரிய தேசங்களின் நட்புறவும் ஒத்துழைப்பும் மிக சாதகமான முன்னெடுப்பு ஆகும்.

தெற்குலகின் இரு முக்கிய தேசங்களான இந்தியா – சீனாவுக்கு ஏகாதிபத்திய அழுத்தத்தை எதிர்ப்பதும் பல்துருவ உலகை உருவாக்குவதிலும் பெரும் பொறுப்பு உள்ளது. இரு நாடுகளிடையே உருவாகும் ஒருமைப்பாடு இரு தேச மக்களுக்கு மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரின் சமாதானம் மற்றும் முன்னேற்றத்துக்கு பயன்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.