புதுதில்லி:
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது போலீசார் தடியடிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இதில் நான்கு மாணவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். 11 மாணவர்களை, காவல்துறையினர் இழுத்துச்சென்று அடைத்து வைத்து, பின்னர் விடுவித்திருக்கின்றனர்.வியாழன் அன்று மாலை புதுதில்லி மண்டி ஹவுஸிலிருந்து, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வரை மாணவர்கள் பேரணியாக வந்தனர். பின்னர் ஜேஎன்யு மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் சார்பில் ஒன்பது பேருடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலாளர் அமித் கரே பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்களின் பிரதான கோரிக்கை, ஜேஎன்யு துணை வேந்தர் நீக்கப்பட வேண்டும் என்பதாகும். இதனை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. பின்னர் சமீபத்தில் உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டண உயர்வு முதலானவை குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. அதிலும் உருப்படியான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
பின்னர் குழுமியிருந்த மாணவர்கள் மத்தியில் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர் அய்ஷே கோஷ் கூறுகையில், அமைச்சகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் “திருப்திகரமாக இல்லை” என்றும். எனவே தொடர்ந்து பேரணியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவரைச் சந்திப்போம் என்று கூறினார். பின்னர் மாணவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர். எனினும் போலீசார் அவர்களைப் போகவிடாமல் தடுத்து, தடியடிப் பிரயோகம் நடத்தி, போலீஸ் வேன்களில் ஏற்றி காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். இதில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.