india

img

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் - தேர்வுகள் தள்ளிவைப்பு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு, குடியுரிமைச் சட்டத்தை அமலாக்கப்பட்டதை கண்டித்து வடகிழக்கு மாநிலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்களும், மத்திய அரசிற்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே இருந்து வெளியில் வராதபடி டெல்லி போலீஸார் இரும்பாலான தடுப்புகள் அமைத்திருந்தனர். இந்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நாடாளுமன்றத்திற்கு அணிவகுக்க முயன்ற போது, போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதன் பிறகும் மாணவர்கள் கூட்டம் கலையாமல் இருக்கவே அங்கு தண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. எனினும், மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவித்து, மீண்டும் ஜனவரி 6-ஆம் தேதி பல்கலைக்கழகம் திறக்கப்படும்  என பல்கலைக்கழகத்தின் பி.ஆர்.ஓ தெரிவித்துள்ளார். மேலும், தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.