பிரதமர் மோடி செல்ஃபி பூத்கள் அமைப்பதற்கான செலவினங்கள் குறித்த ஆர்.டி.ஐ கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவ்ராஜ் மனஸ்புரே, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் மிகப்பெரும் செலவில் பிரதமர் மோடியின் பலவிதமான உருவங்களுடன் கூடிய செல்ஃபி பூத்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த சூழலில், அமராவதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஜய் போஸ் என்பவர் மத்திய ரயில்வே, மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு ரயில்வே ஆகிய ஐந்து மண்டலங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் மோடி செல்ஃபி பூத்கள் அமைப்பதற்கான செலவினங்கள் குறித்த கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவ்ராஜ் மனஸ்புரே மட்டுமே பதிலளித்திருந்தார். அதில், மத்திய ரயில்வே மண்டலத்தில் மட்டும், சுமார் 20 நிரந்தர செல்ஃபி பூத்கள் ஒவ்வொன்றும் ரூ.6.25 லட்சம் என மொத்தம் ரூ.1.25 கோடி செலவிலும், 32 தற்காலிக செல்ஃபி பூத்கள் ஒவ்வொன்றும் ரூ.1.25 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் செலவிலும் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆர்.டி.ஐ கேள்விக்கு மற்ற மண்டலங்களில் இருந்து பதில் வரவில்லை. இந்த நிலையில், சிவ்ராஜ் மனஸ்புரே எவ்வித முன் அறிவிப்புமின்றி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், 2023ஆம் ஆண்டுக்கான ரயில்வேயின் உயரிய விருதான 'Ati Vishisht Rail Seva Puraskar' பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.