india

img

டிரம்ப் பற்றிய கேள்விக்கே கை கால் நடுங்குவதா? - ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

புதுதில்லி,மார்ச்.21- பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியாக அமெரிக்காவால் மிரட்டப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற வெளியுறவு இணை அமைச்சர் பபித்ரா மார்கரெரிடா செயலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
நான் நாடாளுமன்றத்தில் "பிரிக்ஸ்" நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்துள்ள இறக்குமதி வரி மிரட்டல் பற்றிய கேள்வி ஒன்றை (கேள்வி எண் 3518/21.03.2025) வெளியுறவு அமைச்சரிடம் எழுப்பியிருந்தேன். 
பிரிக்ஸ் நாடுகள் மீது 100 % இறக்குமதி வரி விதிப்போமென்ற அமெரிக்க அதிபரின் மிரட்டல் குறித்த இந்திய அரசின் நிலை என்ன? எதிர் வரி விதிப்பு என்கிற நடவடிக்கை மேற்கொள்ளுமா? அரசின் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் என்ன? என்று கேட்டு இருந்தேன். 
இதற்கு பதில் அளித்த வெளியுறவு இணை அமைச்சர் பபித்ரா மார்கரெரிடா நான் எழுப்பிய கேள்விக்கு எந்த பதிலும் இல்லாத ஒரு பதிலைத் தந்துள்ளார். 
இந்தியா "பிரிக்ஸ்" அமைப்பின் உருவாக்க உறுப்பினர், 20 ஆண்டுகளாக இந்த அமைப்பு உறுப்பினர் உள்ளடக்கத்திலும், அது கையாளும் நிரல்களிலும் விரிந்து கொண்டே வந்துள்ளது. பிரிக்ஸ் செயல்பாடுகள் குறித்த புரிதலை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்வது நமது கடமை என்று பதிலளித்துள்ளார். 
இது என்ன பதில்? 
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியாக அமெரிக்காவால் மிரட்டப்படுவது பற்றிய இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்விக்கு இந்த பதிலை அளித்திருக்கிறார்கள் . 
பிரிக்ஸ் நாடுகளுக்கு நேரடி மிரட்டல் விடுக்கும் அமெரிக்க அரசுக்கு நாடாளுமன்றக் கேள்விகளிலும் சாமரம் வீச வேண்டுமா ? 
இந்தியா, எதிர் வரி விதிப்பு என்ற முடிவை எடுக்குமா என்ற கேள்விக்கான பதிலைப் பார்த்தால் "பசுமாட்டைப் பற்றி கட்டுரை கேட்டால் , சிறுவன் ஏற்கெனவே படித்து மனனம் செய்து வைத்திருந்த தென்னை மரத்தைப் பற்றிய கட்டுரையை எழுதி விட்டு அதன் கீழ் கட்டப்பட்டது தான் பசுமாசு " சிறுவனின் பதிலைப் போல பதிலைக் கொடுப்பது ஒன்றிய அமைச்சர் தானா என யோசிக்க வேண்டியுள்ளது. 
"பிரிக்ஸ்" செயல்பாடுகள் பற்றிய புரிதலை உருவாக்குவது இருக்கட்டும் . இந்திய இறையாண்மையை ஏகாதிபத்தியத்திற்கு இரையாக்காதீர்கள் அமைச்சரே. ஏற்றுமதி வரிக்கே இந்தப் பதிலெனில் , அதை விதித்த எஜமானரைப் பற்றி கேட்டால் என்னவாகுமோ? என தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார்.