மும்பை:
மும்பை மற்றும் கொல்கத்தாவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்படுவதை,தாங்கள் பணம் சம்பாதிக்கும் ஏற்பாடாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர் குரூர மனம்கொண்டவர்கள்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 9 இடங்களில் முகாம் நடத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போலி கொரோனா தடுப்பூசி போட்டது அம்பலமாகி உள்ளது.தடுப்பூசி செலுத்தியவர்கள் கோவின் செயலியில் சான்றிதழை பெற சென்ற போது, அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இடம், நேரம் குறித்து மாறுபட்ட தகவல் இடம்பெறவும் காவல்துறையினரை அணுகியுள்ளனர். அப்போது காவல்துறை யினர் விசாரித்த போது போலி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியை போடுவ தாக ஆயிரத்து 260 ரூபாய் வசூல் செய்யப்பட்ட தாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக 2 மருத்துவர்கள் உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதுதொடர்பாக காவல் இணை ஆணையர் விஸ்வாஸ் நான்கரே பாட்டீல், மருத்துவமனை நிர்வாகம் வாங்கிய தடுப்பூசிகள் எண்ணிக்கையை விடவும் செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் சிவராஜ் பதாரியா, அவருடைய மனைவி நிதா பதாரியாவை கைது செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.