india

img

கோயிலைத் திறப்பதா முக்கியம்... கொரோனா ஆபத்தை உணருங்கள்.... பாஜகவினருக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்...

மும்பை:
நாட்டிலேயே கொரோனா இரண்டு அலைகளிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. இதனால், அங்கு மக்கள் கூடுவதற்கு தற்போதும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்வைத்து, கோயில்களை திறக்குமாறு பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், பாஜகவினரின் இந்த போராட்டங்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.“கொரோனா நேரத்தில் சில கட்சிகள் அரசியலில் ஈடுபடுவதையும், கூட்டத்தை தவிர்க்க முடியாத இடங்களை மீண்டும் திறந்து விடுங்கள் என கோரிக்கை வைப்பதையும் தவிர்க்க வேண்டும். மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம். நீங்கள் போராட்டம் நடத்துங்கள். ஆனால், அந்த போராட்டம் கொரோனா வைரசுக்கு எதிராக இருக்கவேண்டும். கொரோனா 3-வது அலையை தடுப்பதும் அல்லது அதை திரும்ப அழைப்பதும் நம் கையில்தான் உள்ளது.

மகாராஷ்டிரா அரசு, வேறு எந்த மாநிலங்களும் செய்ய முடியாத அளவுக்கு கொரோனா தொற்றுநோயை சமாளிக்க சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளது. ஆனால் ஆக்சிஜன் உற்பத்தியில் நாம் பற்றாக்குறையாகவே இருக்கிறோம். கொரோனா 2-வது அலையின்போது மாநிலத்தில் தினமும் 1,700 முதல் 1,800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. இதை மாற்ற மாநிலங்களில் இருந்து வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, 3 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்க அறிவுறுத்தி இருந்தாலும் இதற்கு நேரம் எடுக்கும்.கொரோனா எனும் எதிரி இன்னும் முழுமையாக தோற்கடிக்கப்படவில்லை. அதன் தடித்த வால் இன்னும் நீண்டுகொண்டுதான் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.