india

img

மேற்குவங்க வன்முறை... குழு அமைத்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பின்னர் நடந்த வன்முறை தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க வேண்டும்என்று தேசிய மனித உரிமைகள்ஆணையத்துக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மே 2 அன்று வெளியிடப்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். இதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சியினர் மீதும் காங்கிரஸ், பாஜகவினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் மீது ஆளும்கட்சியினர் கடும் தாக்குதல் தொடுத்து வருவதாக இக்கட்சியினர் குற்றம்சாட்டினார். பலர் உயிருக்கு பயந்து ஊரை காலி செய்து விட்டு சென்றுள்ளனர்.

வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் கண்டித்தார். இந்நிலையில், மேற்கு வங்க வன்முறை குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாழ்த்தப்பட் டோர் ஆணையம், மகளிர் ஆணையத்துக்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், டீன்கள் என 600 பேர் இணைந்து கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினர்.இதனிடையே தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக விசாரிக்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதிராஜேஷ் பிந்தால் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.  இந்த மனுக்கள் மீதான விசாரணையில், தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும்  இக்குழுவில் மேற்கு வங்க மாநில சட்டச் சேவை ஆணைய உறுப்பினர் - செயலர், உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் என்றும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்தக்குழுவில் இடம்பெறவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.