நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தர்வகளை அவதூறாக பேசியதாக ஏற்கனவே நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையில் தற்போது அவரை மீண்டும் கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டதாக மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைதொடர்ந்து இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி நடிகை மீரா மிதுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சம்பந்தப்பட்ட ஆடியோ பதிவிட்ட நாளில் வேறொரு நிகழ்வில் இருந்ததாகவும், தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் மீரா மிதுன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஒவ்வொருவரின் மீதும் அவதூறான உண்மைக்கு புறம்பான கருத்துகளை பதிவிடுவதை மீரா மிதுன் வழக்கமாக வைத்துள்ளதாகவும், ஏற்கனவே பட்டியலின மக்களை விமர்சித்து தடுப்பு காவலில் கைதாகியுள்ளார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீரா மிதுனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அவரை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், சமூக வலைதளங்களில் உள்ள அவரின் பதிவுகளை நீக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.