கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரின் வழக்குகளையும் பதிவுசெய்யுமாறு காவல்துறைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை 3-வது முறையாககைப்பற்றியது. இக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட தொகுதியில் தோற்றா லும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தங்களுக்கு வாக்களிக்காத மக்கள் மீதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சியினர் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ், பாஜகவினர் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இதுகுறித்து சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பிரமோத் கோலி தலைமையிலான 5 பேர் கொண்ட, ‘கால் பார் ஜஸ்டிஸ்’ என்று அமைப்பின் உண்மை கண்டறியும் குழு மேற்கு வங்கம் சென்று விசாரித்தது. இக்குழு தனது அறிக்கையை ஒன்றியஉள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள் ளது.மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவு வெளியான பிறகு மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.மேற்குவங்க வன்முறை குறித்த இடைக்கால அறிக்கையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான வழக்குகள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரின் வழக்குகளையும் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் மருத்துவ சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரேசன் கார்டுகள் இல்லை என்றாலும் உணவுப் பொருள் வழங்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மேற்கு வங்காளத்தில் வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மேற்கு வங்க தலைமை செயலாளர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வன்முறையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பாஜக தலைவர் அபிஜித் சர்க்காரின் இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.