india

img

நிலையான வளர்ச்சியில் நாட்டிலேயே கேரளா முதலிடம்.... 2020-21 நிதியாண்டுக்கான பட்டியலை வெளியிட்டது நிதி ஆயோக்....

திருவனந்தபுரம்:
அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியநிலையான வளர்ச்சிக் குறியீட்டில், நாட்டிலேயே 75 புள்ளிகளுடன் கேரள மாநிலம்முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்து ள்ளது.தலா 74 புள்ளிகளுடன் தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேச மாநிலங்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன.

வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், அனைவருக்கும் குடிநீர், பாலின சமநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறப்பாக செயல்படும்மாநிலங்களின் பட்டியலை (The Index for Sustainable Development Goals -SDGs) ‘நிதி ஆயோக்’ (NITI Aayog) அமைப்பு ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. இதன்படி 2020-21இல் 17 இலக்குகள், 70 குறிகாட்டிகள், 115 காரணிகள் அடிப்படையில் நிலையான வளர்ச்சியைப் பெற்ற மாநிலங்களின் பட்டியலை ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் வியாழனன்று வெளியிட்டார். 

இந்த பட்டியலில்தான், ஒட்டுமொத்த செயல்பாடுகள் அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கும் கேரள மாநிலம் 75 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.‘இத்துடன் நிதி ஆயோக் இந்தப் பட்டியலை வெளியிடத் துவங்கியதிலிருந்து 2018-19, 2019-20, 2020-21 என தொடர்ந்து மூன்றாவதுஆண்டாக முதலிடத்தை கேரளா முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.’தலா 74 புள்ளிகளுடன், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இரண்டாமிடத்தையும், ஆந்திரா, கோவா, கர்நாடகா, உத்தரகண்ட், சிக்கிம், மகாராஷ்டிராஉள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.அசாம் (57), ஜார்க்கண்ட் (56), பீகார் (52) ஆகிய மாநிலங்கள் கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மாநிலம் மிக மோசமாக வெறும் 52 புள்ளிகளையே பெற்றுள்ளது.

பட்டினியை ஒழித்தல், கல்வியறிவு வழங்குதல் ஆகிய பிரிவுகளில் கேரளமும், சண்டிகர் யூனியன் பிரதேசமும் சிறப்பான செயல்பாடுகளைக் காட்டியுள்ளன. தனிநபர் வருவாயை அதிகரிப்பதில் தமிழ்நாடு மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களும், பொது சுகாதாரத்தில் குஜராத் மற்றும்தில்லி ஆகிய மாநிலங்களும் முன்னிலை பெற்றுள்ளன. பாலின சமநிலை விஷயத்தில் சத்தீஸ்கர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளும், சுத்தமான குடிநீர் வழங்குவதில் கோவா மற்றும் லட்சத்தீவுகளும் முதலிடத்தில் வந்துள்ளன.சுத்தமான எரிசக்தியை பொறுத்தவரை ஆந்திரா - கோவா - ஹரியானா - தமிழ்நாடு - தெலுங்கானா உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களும் சிறப்பாக செயல்பாடுகளைக் காட்டியுள்ளன.பொருளாதார வளர்ச்சியில் இமாசல பிரதேசம் - சண்டிகரும், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குஜராத் - தில்லியும், சமநிலை யின்மையை குறைப்பதில் மேகாலயா - சண்டிகரும், நகரங்களை நிலையாக வைத்திருப்பதில் பஞ்சாப் மற்றும் சண்டிகரும் சிறந்த செயல்பாடுகளைக் காட்டியுள்ளன. இதேபோல பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் திரிபுரா - ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒடிசா - அந்தமான் தீவுகளும் சிறப்பாக செயல்படுவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.