பெங்களூரு:
கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜர்கிகோலி. 60 வயதான இவர், ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மார்ச் 3-ஆம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, ஜர்கிகோலி, இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் ரமேஷ் ஜர்கிகோலி தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டியது ஆனது.ஆனால், இந்த வீடியோ தனக்கு எதிராக சதி என்று ஜர்கிகோலி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கர்நாடக அரசு சிறப்புப் படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திலேயே ஆஜராகி ஜர்கிகோலிக்கு எதிராக வாக்குமூலம் தந்தார். கப்பன்பார்க் காவல்நிலையத்தில் தனியாக புகாரும் அளித்தார்.
இதனிடையே, கொரோனாவைக் காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துவந்த முன்னாள் அமைச்சர் ஜர்கிகோலி, தற்போது, ‘திடீர் திருப்பமாக ஆபாச வீடியோவில் இளம்பெண்ணுடன் இருப்பதுநான்தான்’ என்று போலீசாரிடம் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கர்நாடகத்தில் உள்ள அணைகள் குறித்து குறும்படம் எடுக்க தன்னை அணுகியபோது, அவருடன் பழக்கம் ஏற்பட்டது’ என்று ஜர்கிகோலி வாக்குமூலம் குறிப்பிட்டிருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.