புதுதில்லி:
ஐ.ஐ.டி.யில் இட ஒதுக்கீடுதொடரும் என அமைச்சர் பதிலளித்துள்ளார். எனவே இடஒதுக்கீட்டை மறுக்கிற, கைவிடுகிற வகையிலான மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆய்வுக்குழு அறிக்கையை நிராகரித்து,சர்ச்சைக்கு முடிவு கட்டுங்கள் என்று மத்திய கல்வி அமைச்சரை சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஐ.ஐ.டி பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டைக்கைவிடுமாறும், சில பதவிகளுக்கும் மட்டுமானதாக சுருக்குமாறும் மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரைத்திருந்ததால் இட ஒதுக்கீடு தொடர்வது பற்றி அச்சம் நிலவுகிறது. இப் பின்னணியில் ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் “ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்படுகிறதா” என்று எழுப்பிய கேள்விக்கு (நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண் 2137/08.03.2021) அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதில் “இல்லை” என தெரிவித்துள்ளார்.இப் பிரச்சனையில் தொடர்ந்து சு. வெங்கடேசன், மாணவர் அனுமதிகளில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ். டி மாணவர்பிரதிநிதித்துவம் உரிய அளவுகளில் உறுதி செய்யப்படுவது, ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டைக் கைவிடுகிற ஆய்வுக் குழு அறிக்கையை அரசு நிராகரிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி வருகிறார்.
முற்றுப்புள்ளி வையுங்கள்
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., கருத்து தெரிவிக்கையில் “மத்தியக் கல்வி அமைச்சகம் அமைத்த ஆய்வுக் குழு அறிக்கை ஒரு நிச்சயமற்ற நிலையை, அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஐ.ஐ.டி மாணவர்கள் சிலர் கவலையோடு என்னிடம் பேசி வருகிறார்கள். ஆய்வு அறிக்கை பரிசீலனையில் இருக்கிறது என்ற பெயரால் பேராசிரியர் நியமனங்களே மேற்கொள்ளப்படாமல் இழுத்தடிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளது. பி.எச்.டி அனுமதிகளிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்குவது கட்டாயமானதாக இருக்க வேண்டியதில்லை என அந்தஆய்வறிக்கை கூறியிருப்பதும் அவர்களின் கவலைக்கு காரணம். தற்போது அமைச்சர் இட ஒதுக்கீடு தொடர்கிறது என்று பதில் அளித்துள்ளார். பதில் மட்டும் போதாது. ஆய்வறிக்கையை உடனடியாக நிராகரித்து சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும். உடனே பேராசிரியர் பணி நியமனங்களை மேற்கொண்டு உரிய பிரதிநிதித்துவத்தை ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி/ பிரிவினர்க்கு உறுதி செய்ய வேண்டும்” எனத்தெரிவித்துள்ளார்.