புதுதில்லி:
தில்லியில் ரூ. 971 கோடி மதிப்பில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இந்த புதிய கட்டடம் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள்- 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி திறக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டுவிழா தில்லியில் வியாழனன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையில் பங்கேற்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.இந்நிலையில், பிரதமர் மோடிதலைமையிலான அரசின் செயல்பாடுகளை, காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். “பிரதமர் அவர்களே, நாடாளு மன்றம் கற்களாலும், தூண்களாலும் கட்டப்படுவதில்லை.
அது ஜனநாயகத்தை உருவகப்படுத்து கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் கிரகித்துள்ளது. அரசியல், பொருளாதார, சமூக சமத்துவத்தை அது உணர்த்துகிறது. இரக்கம், குழுவாக இணைந்து பணியாற்றுபவர்களுக்கான நட்புறவு, அனுபவத்தைப் பகிர்தல் மற்றும் 130 கோடி மக்களின் ஆசைகளையும் நாடாளுமன்றம் உணர்த்துகிறது. ஆனால், இந்த உயர்ந்த மதிப்புகளை எல்லாம் மிதித்து நசுக்கிவிட்டுக் கட்டும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் எதை உணர்த்தப் போகிறது?” என்று விளாசியுள்ளார்.மேலும், “நமக்கு உணவு வழங்கும் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகக் கடந்த 16 நாட்களாகச் சாலையில் போராடி வருகிறார்கள். ஆனால், சென்ட்ரல்விஸ்டா என்ற பெயரில் உங்களுக்குஅரண்மனை கட்டுகிறீர்கள். ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது ஒருவரின் விருப்பத்தையும், ஆசை களையும் நிறைவேற்றுவது அல்ல. பொதுநலத்துடன் மக்களுக்குச் சேவையாற்றுவதாகும்’’ என்று தெரிவித்துள்ள ரன்தீப் சிங், “விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகச் சாலையில் போராடும்போது, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றம் கட்டும் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்றார் என்ற நிகழ்வை வரலாறு பதிவு செய்யும்” என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.