india

img

ஆட்சி அதிகாரத்திற்காக இப்படியா அலைவது? பாஜக தலைவர் என்று கூறவே வெட்கமாக இருக்கிறது.. இமாச்சல் முன்னாள் முதல்வர் சாந்தகுமார் வேதனை....

புதுதில்லி:
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை வீழ்த்துவதற்காக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் பாஜக-வின் கேவலமான அரசியலைப் பார்க்கையில்- அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் என்று கூறவே வெட்கமாக இருக்கிறது என்று இமாசலப்பிரதேச முன்னாள் முதல்வர் சாந்த குமார் கூறியுள்ளார்.இமாசலப் பிரதேசத்தில் பாஜக சார்பில் இரண்டுமுறை முதல்வராக இருந்தவர் சாந்தகுமார். இவர் அண்மையில் தனது வாழ்க்கை வரலாற்றை “நிஜ் பாத் கா அவிச்சல் பாந்தி” (Neej Path Ka Avichal Panthi) என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில்தான் இந்தக் கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

“மக்கள் பாஜகவை அதன் இலட்சியவாதத்தின் காரணமாகவே உலகின் மிகப்பெரிய கட்சியாக மாற்றினர். ஆனால், இப்போது அதற்கு அதிகாரப் பசியாகி விட்டது. அதிகாரத்திற்கு அலையும் கட்சியாக மாறிவிட்டது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் எனது கட்சி ஈடுபடுவதை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது.நாம் அனைவரும் அரசியலில் சேருவது சமூகங்களை மாற்றுவதற்காகத்தான். மாறாக, அரசாங்கங்களை மாற்றுவதற்காக அல்ல! அரசாங்கங்கள் பண சக்தியால் மோசடியாகக் கவிழ்க்கப்படலாம், ஆனால் அது நாம் விரும்பிய சமூக மாற்றத்தைக் கொண்டுவராது.

இந்தியாவின் அரசியலை மாற்றும் அதிகாரம் பெற்ற எனது கட்சி, கொள்கை அடிப்படையிலான அரசியலிலிருந்து ஒருபோதும் விலகி விடக்கூடாது என்று விரும்புகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை இப்போதைக்கு வேண்டுமானால் நாம் பணசக்தியைக் கொண்டு மோசடியாக கவிழ்க்கலாம். ஆனால், நாம் விரும்பிய சமூகமாற்றம் அதனால் ஏற்படாது. அரசியல் சூழ்நிலையை மாற்ற வேண்டுமானால், தேர்தல்களில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க பிரதமர் கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்.” என்று சாந்த குமார் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் கூறியுள்ளார்.மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது. ரூ. 300 கோடி ஊழல் புகாருக்காக 2003-இல் வாஜ்பாய் ஆட்சியின் போது, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டதையும் சாந்த குமார் இந்த நூலில் விளக்கியுள்ளார்.