புதுதில்லி:
இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்கின்றன என்றும் மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்கூறியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிராகரித்துள்ளார்.
“ஏப்ரல் தொடக்கத்தில் உள்ள விபரங்களின்படி தங்களது மக்கள் தொகையில் அமெரிக்கா 32 சதவிதம் பேருக்கும் இங்கிலாந்து 47 சதவீதம் பேருக்கும் தடுப்பூசியின் முதல் சுற்றை போட்டுவிட்டனர்; ஆனால் இந்தியா இப்போது வரை வெறும் 5.2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசிசெலுத்தி மிகவும் பின்தங்கி உள்ளது ” என்று சீத்தாராம் யெச்சூரி அம்பலப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது அலை
கோவிட் 19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வரத்துவங்கியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில்சமீப நாட்களாக கோவிட் தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றமனநிலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, தில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், சில நகரங்களில் வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வெவ்வேறு விதமான ஊரடங்கு உத்தரவுகள் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என்றும் இதுதொடர்பாக வரும் தகவல்கள் வதந்தி என்றும் தமிழக அரசின்சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. எனினும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள் ளது. (செய்தி : பக்கம் 3)
எனினும் கோவிட் பாதிப்பு மற்றும் மரணங்கள் தொடர்பாக தகவல்கள் வெளிவரும் போது மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்நிலையில் இடைவிடாமல் கோவிட் பரவலை தடுப்பதற்கான முயற்சிகள், மக்கள் கூடும்இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மட்டுமின்றி தடுப்பூசியை பரவலாகக் கொண்டு செல்வதுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
தடுப்பூசி தட்டுப்பாடு
இந்த நிலையில்தான் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பிரச்சனை எழுந்துள்ளது. சர்வதேச அளவில் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகள் நல்லெண்ண அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; ஆனால் உள்நாட்டில் தடுப்பூசி விநியோகம் பற்றாக்குறையாக இருக்கிறது என்பது அதிர்ச்சி தரத்தக்கதாக உள்ளது.இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் அரசால்அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பாரத் பயோடெக் இன்டர்நேசனல் லிமிடெட் நிறுவனம் தயாரித்த கோவாக்சின்; மற்றொன்று ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராஜென்கா தயாரிப்பில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற கோவிஷீல்டு. இந்த இரண்டு தடுப்பூசிகளின் உற்பத்தியுமே இந்திய உள்நாட்டு மற்றும் உலகநாடுகளின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இல்லை. எனவே அரசு முதலில் செய்ய வேண்டியது இந்த இரண்டு தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு என்ன வழி என்பதைகண்டறிவது; மேலும் பிற நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ள சில தடுப்பூசிகளை அங்கீகரித்து ஒப்புதல் அளித்து அவற்றையும் இங்கு உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது - இவை இரண்டுமே அவசியமாகும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மட்டுமின்றி எளிதில் எடுத்துச்செல்வதற்கு வசதியாக உள்ள - ஒரே ஒரு சுற்று மட்டும் போட்டால் போதும் என அங்கீகரிக்கப்பட்டுள்ள - ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து அரசு இதுவரை எந்த யோசனையும் முன்வைக்கவில்லை. இந்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்து உரிமம் அளித்தால் உடனடியாக கூடுதலான கோவிட் தடுப்பூசிகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தனியாரின் கைகளில்...
அடுத்த முக்கிய பிரச்சனை, உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை மத்திய அரசு எப்படி விநியோகம் செய்கிறது என்பதைப் பற்றியதாகும். வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை வாங்குவதும் அதை மக்களுக்கு இலவசமாக விநியோகிப்பதும் அரசுக்கு மிகுந்த செலவு பிடிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. அதனால்தான் பாரத் பயோடெக் மற்றும் ஆஸ்ட்ராஜென்கா ஆகியதடுப்பூசி தயாரிப்பாளர்களை, இந்தியாவில் தயாரித்து, தனியார் சந்தையிலும் அவற்றை விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் சற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று அனுமதித்திருப்பதன் விளைவாக அவர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்வதற்கும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளை இந்த நிறுவனங்களிடமிருந்து அரசு தடுப்பூசிகளை வாங்கி மானிய விலையில் மக்களுக்கு, தனியார் மூலமாக சந்தையில் விற்பனை செய்யும் என்பதிலும் சந்தேகம் இல்லை. தற்சமயம் இந்த தடுப்பூசிகள் தனியார் சந்தையில் ரூ.250 விலையில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கோடானுகோடி இந்திய மக்கள் பணம் கொடுத்து தடுப்பூசி வாங்கி போட்டுக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. சில தனியார் நிறுவனங்கள், சில அறக்கட்டளைகள் மூலம் மொத்தமாக தடுப்பூசிகளை வாங்கி அவர்களது பணியாளர்களுக்கு பயன்படுத்தும் நிலை என்பது உருவாகியுள்ளது. ஆனால் 120கோடி மக்கள் கொண்ட இத்தனை பெரிய இந்தியதேசத்தில் இப்படி மிக மிக மெதுவாக தடுப்பூசிகளை விரும்புபவர்கள் வாய்ப்பிருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டிருப்பதும், அப்படி உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பதும், தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கென்றே இருக்கின்ற இந்திய பொதுத்துறை நிறுவனங்களை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் இந்தியாவை கோவிட் பிடியிலிருந்து சுலபத்தில் மீட்காமல் பலிகடா ஆக்குகிற செயலே அன்றி வேறல்லஎன்ற கடும் விமர்சனத்தை சுகாதாரத்துறை வல்லுனர்கள் முன் வைத்துள்ளனர். இந்தியாவின் இளைய தலைமுறை யினருக்கு எத்தனை வேகமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதோ அதைப் பொறுத்துத்தான் இந்தியப் பொருளாதாரமே மீண்டும் மீள்வதற்கான அறிகுறிகள் தென்படும். ஆனால் அதைப்பற்றிய திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை.
கோவிட் வைரசின் அடுத்தடுத்த பரிமாணங்கள்
கோவிட் 19 வைரஸ் அடுத்தடுத்து பரவும் போது புதிய புதிய பரிணாமங்களை எட்டுகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்போது, ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது அதிலும் மரபணுப் பிறழ்வுகள் ஏற்பட்டு புதிய புதிய வகைகளாக மாற்றம் பெறுகிறது. எனவே தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, மற்ற நோய்களுக்கான ஒரே முறை தடுப்பூசி என்பதாக இல்லாமல், குறிப்பிட்டசில மாதங்களுக்கு முதல்முறை தடுப்பூசி, அதைத்தொடர்ந்து இரண்டாம் முறை தடுப்பூசி என வழங்குவது படிப்படியாக கோவிட் 19 வைரஸ் பரவலையும், அது உருமாறும் வேகத்தையும், அதன் வீரியத்தையும் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஆஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை முதலில் செலுத்திய பிறகு ஆறு வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கணிசமான மக்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிசெலுத்திவிட்டார்கள். அவர்கள் குறிப்பிட்ட சிலவாரங்கள் கழித்து - கோவிட் 19 வைரஸ் உருமாறும்வீரியத்தின் அடிப்படையில் - 16 வாரங்கள், 12 வாரங்கள் என - இரண்டாவது சுற்று தடுப்பூசி செலுத்த இருக்கிறார்கள்.
ஆனால் இதற்கான எந்தத் திட்டமிடலும் மோடி அரசிடம் இல்லை. ஊரடங்கு போட்டு முடக்கிவிடுவோம் என்றஅச்சுறுத்தலைத் தவிர மோடி அரசிடம் கோவிட் - 19 பரவலைத் தடுக்க எந்த உருப்படியான திட்டமும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள்சுயேட்சையாக தற்காப்பு ஏற்பாடுகளுடன் இருப்பதுஎன்பது எப்போதுமே மிகக்குறைந்த விகிதத்திலேயே இருந்து வருகிறது. முகக்கவசம் அணிவதை வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தினால் தவிரஅது குறித்த உணர்வற்றவர்களாக மக்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களது அன்றாடவாழ்க்கைத் தேவைகள் அவர்களை உந்தித் தள்ளுகின்றன. எனவே மக்களைக் குறைசொல்வதைவிடுத்து கோவிட் பரவலை தடுப்பதற்கான முயற்சிகளையும் தடுப்பூசி பெருவாரியான மக்களுக்கு செலுத்தப்படுவதையும் மோடி அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற பிரச்சனை தீவிரமாக எழுந்துள்ளது.
சீரம் நிறுவனத்தின் வேண்டுகோள்
ஏப்ரல் 5 நிலவரத்தின்படி இந்தியா ஒரு லட்சம்மக்கள் தொகைக்கு வெறும் 6,310 பேருக்குத்தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறது. ஆனால் உலக சராசரி என்பது 1லட்சம் பேருக்கு 8,900 தடுப்பூசிகள் ஆகும். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பதில் இஸ்ரேல், சிலி, பிரிட்டன், அமெரிக்கா,பிரேசில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. ஆனால் இந்தியா மிக பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.
இந்த நிலையில்தான் மத்திய மோடி அரசு தங்களுக்கு உதவினால் கூடுதலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று சீரம் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் ஆடெர் பூனாவாலா, தற்சமயம் தங்களது நிறுவனம் மாதத்திற்கு 60 முதல் 65 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன்பெற்றிருக்கிறது என்றும் இதை உயர்த்துவதற்கு உடனடியாக ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்றும் அது கிடைத்தால் இன்னும் மூன்றுமாதங்களில் கணிசமான தடுப்பூசிகளை உற்பத்திசெய்ய முடியும் என்று கூறியிருக்கிறார். மத்திய அரசின் வேண்டுகோளின்படி மானிய விலையில் தடுப்பூசிகளை வழங்கி வருவதாகவும், தடுப்பூசி உற்பத்தி மூலம் மிகப்பெரிய அளவில் லாபம் சம்ம்பாதிக்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். (விரிவான செய்தி: பக்கம் 6)
சீத்தாராம் யெச்சூரி கேள்வி
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடுமையானகேள்விகளை எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி, “மத்திய அரசாங்கம் கூறிக்கொள்வது போல, தடுப்பூசி பற்றாக்குறை இல்லையெனில் ஏன் நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் அமலாக்கப்படவில்லை? மோடி அரசாங்கம் செயல்பட வேண்டுமானால் இந்த நாட்டில் இன்னும் எத்தனை மரணங்கள் நிகழ வேண்டும்?” என்று சாடியுள்ளார்.“கோவிட் பெருந்தொற்று இன்னும் தீவிரமாக தலைவிரித்தாடுகிறது. தினசரி தொற்று எண்ணிக்கையில் இந்தியா பிரேசிலையும் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளது.இந்த நேரத்திலும் கூட பிரதமர் தடுப்பூசி தயாரிப்பைஅதிகரிக்க மறுக்கிறார். தடுப்பூசி தயாரிப்பில் பலஅழுத்தங்களை, பல பிரச்சனைகளை எதிர்கொள்வதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம்நிறுவனம் தெரிவிக்கிறது. பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக என்று கூறி உருவாக்கப்பட்ட, ஆனால் இதுவரையிலும் தணிக்கைக்கு உட்படுத்தப்படாத கோடிக்கணக்கான ரூபாய் பணம் உள்ளதனது பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து உதவுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மறுக்கிறார்.
அதற்கு மாறாக மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று உபதேசம் செய்வதில்தான் பிரதமர் கவனம் செலுத்துகிறார். இது மிகவும் மோசடியானது. பாஜக அரசு தனது கடமையை தட்டிக்கழித்துச் செல்ல முடியாது. வயது வந்த அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கு உடனடியாக மோடி அரசு செயல்பட்டாக வேண்டும்” என்றும் சீத்தாராம்யெச்சூரி வற்புறுத்தியுள்ளார்.