டேராடூன்:
உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 54 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் கங்கை ஆற்றில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. தபோவன் நீர்மின் நிலையத்தின் சுரங்கத்தில் சிக்கிய 30 ஊழியர்களை மீட்கும் பணி நடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. சுரங்கத்தில் சனிக்கிழமை துளை போடப்பட்டு, கேமரா மூலம் அவர்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், திங்களன்று உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை மொத்தம் 54 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 29 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 25 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும், 150 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளது.விபத்து நடந்து ஒரு வாரமாகி விட்டதால், சுரங்கத்தில் சிக்கிய மற்றவர்களின் கதியும் இப்படிதான் இருக்கும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மேலும், வெள்ளத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கானோரின் கதியும் என்னவென்று தெரியவில்லை. பல இடங்களில் சேறும் சகதியுமாகவும் இருப்பதால் மீட்புப்பணி சவாலாக உள்ளது. ஆனாலும், நம்பிக்கையுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது. நேற்று நடந்த மீட்புப் பணியின்போது சுரங்கத்தில் இருந்து 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.