india

img

மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட பணி என்ன? பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அரசின் மழுப்பல் பதில்...

புதுதில்லி:
நாட்டிலுள்ள மொழிகளின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர்பி.ஆர்.நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அரசுத்தரப்பில் மழுப்பலாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக்கூட்டத் தொடர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெகாசஸ் உளவு விவகாரப் பிரச்சனை, வேளாண் சட்டங்கள் ரத்து முதலானவற்றுக்கான முழக்கங்களுக்கு இடையே நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் கண்டுள்ள 22 மொழிகளின் வளர்ச்சி குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுத்துமூலம் அளித்திட்ட பதிலில் கூறியிருப்பதாவது: 

இந்திய அரசின் கொள்கை அனைத்து இந்திய மொழிகளையும் வளர்ப்பதேயாகும். மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மத்தியநிறுவனம்  அட்டவணையில் உள்ள/அட்டவணையில் இல்லாத மற்றும் செம்மொழிகளின் வளர்ச்சிக்காகவும் வேலைசெய்கிறது.இந்தி, உருது, சிந்தி, சமஸ்கிருதம் மொழிகளின் மேம்பாட்டிற்காகத் தனித்தனி அமைப்புகள் உண்டு. சமஸ்கிருதம் மூன்று மத்தியப் பல்கலைக் கழகங்கள் (புதுதில்லி, மத்திய சமஸ்கிருதப் பல்கலைக் கழகம், புதுதில்லி, ஸ்ரீலால்பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், மற்றும் திருப்பதி, தேசிய சமஸ்கிருதப் பல்கலைக் கழகம்) மூலம் வளர்த்தெடுக்கப்படுகிறது.  இந்தி, கேந்திரியா இந்த சன்ஸ்தான்,ஆக்ரா மற்றும் சென்ட்ரல் இந்தி டைரக்டரேட், புதுதில்லி மற்றும் புதுதில்லி, அறிவியல் தொழில்நுட்ப ஆணையம் மூலம் வளர்த் தெடுக்கப்படுகிறது.

மைசூர் நிறுவனம்
சிந்தி மொழி, புதுதில்லியில் உள்ள சிந்தி மொழி மேம்பாட்டிற்கான தேசியக் கவுன்சில் மூலமாக மேம்படுத்தப்படுகிறது.    உருது மொழியும் அதேபோன்றே உருதுமொழி மேம்பாட்டிற்கான தேசியக் கவுன்சில் மூலமாக மேம்படுத்தப்படுகிறது. மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் நான்கு செம்மொழிகளுக்காக, அதாவது, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய நான்கு மொழிகளுக்காகவும் செயல்படுகிறது.சென்னையில் உள்ள செம்மொழி தமிழுக்கான மத்திய நிறுவனத்தால்  செம்மொழித் தமிழ் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அமைச்சரின் பதில் அமைந்துள்ளது.அமைச்சரின் பதிலிலிருந்து மைசூரிலுள்ள செம்மொழிகளுக்கான மத்திய நிறுவனம் தமிழைக் கண்டுகொள்ளவில்லை என்பது நன்கு தெரிகிறது.(ந.நி.)