india

img

போராடும் விவசாயிகளை பிளவுபடுத்த முயற்சி... மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்...

புதுதில்லி:
போராடும் விவசாயிகளை பிளவுபடுத்தும் நோக்கத்தோடு, பஞ்சாப் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு   மத்திய அமைச்சர்களின் கேபினட் குழு அழைத்திருக்கிறது. இதில் பங்கேற்கப் போவதில்லை என பஞ்சாப் விவசாய சங்கங்களின் ஒன்றுபட்ட அமைப்பு  அறிவித்திருக்கிறது. இது அதில்அங்கம் வகிக்கும் தலைவர்களின் முதிர்ச்சியினைப் பிரதிபலிக்கிறது என அம்முடிவை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வரவேற்றிருக்கிறது.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, டிசம்பர் 1 அன்றும் அதனைத்தொடர்ந்தும் நாடு முழுதும் விவசாயிகளைத் திரட்டிக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபடுமாறும், தில்லிக்கு அருகாமையில் உள்ள மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தில்லியை நோக்கி அணிவகுத்து வருமாறும் அதன்மூலம் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை மேலும் வலுப்படுத்திடுமாறும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுக்கிறது.

தனிமைப்படுத்தும் கபட நாடகம்
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், ஏற்கனவே அழைப்பு விடுத்தசங்கங்களுடன் அமைச்சர்களின் உயர்மட்டக்குழு செவ்வாய் மாலை 3 மணியளவில் விவாதம் நடத்தும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது நாட்டின் விவசாயி கள் இயக்கத்தைப் பிளவுபடுத்தி, அதனை பஞ்சாப்புக்கு மட்டுமான பிரச்சனையாகச் சுருக்கிடவும், அதன்மூலம் பஞ்சாப்விவசாயிகளைத் தனிமைப்படுத்தி டுவதற்குமான ஆர்எஸ்எஸ்/பாஜகவின் கபடநாடகமாகும்.அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு 2020 ஜூன் 5, ஆகஸ்ட் 9, செப்டம்பர் 25 மற்றும் நவம்பர்5 ஆகிய தேதிகளில் எண்ணற்ற கிளர்ச்சிப் போராட்டங்களை நாடு முழுதும் நடத்தி இருக்கிறது என்பதையும், இப்போது தில்லியை நோக்கி விவசாயிகள் மேற்கொள்ளும் பேரணியும் அதன் ஓர் அறைகூவல் என்பதும் பாஜக அரசாங்கம் அறியும். ஆனாலும், ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமை வேண்டுமென்றே அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திடாமல் ஒதுக்கி வைத்திருக்கிறது.

பிளவுபடுத்தும் இழிமுயற்சி   
கொடூரமான வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் அகில இந்திய இயக்கத்தையும், விவசாய சங்கங்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைக்குழு   தில்லியை நோக்கி விவசாயிகள் அணிவகுத்து வரும் பேரணிக்கு அறைகூவல் விடுத்ததையும் ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு நன்கு தெரிந்திருந்தும், அதனை பஞ்சாபிகளின் விவசாய இயக்கம் என்பதுபோல் சித்தரிக்க ஆர்எஸ்எஸ்/பாஜக அப்பட்டமான முறையில் இழிமுயற்சிகளில் இறங்கி இருக்கிறது.போராட்டத்தின் முதுகெலும்பாக இருந்திடும் பஞ்சாப் விவசாயிகள் இயக்கத்தைத் தனிமைப்படுத்திட மிகவும் கொடூரமான முறையிலும் வெறுக்கத்தக்க விதத்திலும், நடவடிக்கை எடுத்திருப்பதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. சங்கங்கள் ஒன்றுபட்டுநின்று போராடும்போது அவற்றைப் பிளவுபடுத்துவதற்காக ஆளும் வர்க்கங்களும், ஆர்எஸ்எஸ்/பாஜக-வும் இவ்வாறு முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் பழைய உத்தியாகும்.இப்போது தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமை என்பது கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களினூடே உருக்கு போன்று உருவானதாகும். அதனை உங்கள் இழிமுயற்சிகளால் பிளந்திட முடியாது.

மத்திய அரசு வேளாண் சட்டங்களையும், 2020 மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவையும் ரத்து செய்வதாக அறிவித்திட வேண்டும் என்றும், இது தொடர்பாக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை மேடையுடன், ஜனநாயகப் பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.எங்கள் நடவடிக்கைகளுக்கு ஆதரவுதெரிவித்து மக்களின் அனைத்துப்பிரிவின ரும் முன்வர வேண்டும் என்றும் வேண்டு கோள் விடுக்கிறோம்.  இவ்வாறு ஹன்னன் முல்லா அந்த அறிக்கையில் கூறியுள்ளார். (ந.நி.)