புதுதில்லி:
நாட்டு மக்களின் தனிப்பட்ட வாழ்வை உளவு பார்த்திட இந்திய அரசாங்கம் இஸ்ரேல் உளவு ஸ்தாபனத்தின் பெகாசஸ் வேவு மென்பொருளை (Pegasus spyware) வாங்குவதற்கு யார் அதிகாரம் அளித்தது என்பதற்கு ஒன்றிய பாஜக அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய நாட்டின் இதழாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் செல்பேசிகள் (smartphones) மற்றும் சமூக ஊடகங்களுக்குள் கள்ளத்தனமாக இஸ்ரேல் உளவு ஸ்தாபனமான என்எஸ்ஓ ஊடுருவுவதற்கு வகைசெய்திடும் பெகாசஸ் வேவு மென்பொருள் (Pegasus spyware) பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தங்களைக் கேட்டுக் கொண்ட அரசாங்கங்களுக்காகத்தான் இதனைச் செய்திருப்பதாக என்எஸ்ஓ விளக்கம் அளித்திருக்கிறது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இதழாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் செல்பேசிகள் மற்றும் சமூக ஊடகத்தளங்களில் கள்ளத்தனமாக ஊடுருவியிருப்ப தாகப் புலனாய்வுகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. உலக அளவில் 50 ஆயிரம் ஊடுருவல் நிகழ்வுகள் தெரியவந்துள்ளன. இந்தியா, ருவாண்டா, மொராக்கோ, சவுதி அரேபியா, யுஏஇ, மெக்சிகோ போன்ற நாடுகளில் உள்ளவர்களின் செல்பேசிகள் மற்றும்சமூக ஊடக வலைதளங்கள் ஊடுருவப் பட்டிருக்கின்றன.இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கை, ‘‘இந்தியாவில், நூற்றுக்கும் மேற்பட்டஇதழாளர்கள், ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பெரும்புள்ளிகள் ஆகியவர்களின் திறன்பேசிகள் மற்றும் சமூக ஊடக வலைதளங்கள் கள்ளத்தனமாக ஊடுருவப்பட்டி ருக்கின்றன’’ என்று கூறுகிறது.
இந்தியாவில் குறைந்தபட்சம் 40 இதழாளர்களின் செல்பேசிகள் இந்த வேவுமென்பொருளான பெகாசஸ் மூலமாக ஊடுருவப்பட்டுள்ளன என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தகையஆபத்தான வேவு மென்பொருள் இந்தியாவில் வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடகத்தில்பயன்படுத்தப்படுவது குறித்து நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சனையை எழுப்பியது. மோடி அரசாங்கம் அதனை மறுக்கவில்லை. மாறாக அது ‘‘அதிகாரப்பூர்வ மற்ற கண்காணிப்பு’’ (‘‘unauthorized surveillance’’) இல்லை என்றுதான் கூறியது.
இப்போது வெளியாகியுள்ள விவரங்களி லிருந்து, இந்த அரசாங்கமானது தங்கள் சொந்தக் குடிமக்களையே வேவு பார்ப்பதற்காக என்எஸ்ஓ நிறுவனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது தெளிவாகிறது. என்எஸ்ஓ-விடம் எவ்விதமான ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் செய்திருக்கிறது என்பது குறித்தும், ஒப்பந்த விதிமுறைகள் என்ன என்பது குறித்தும் அரசாங்கத்தின் பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் தெரிவித்திட வேண்டும்.
அடிப்படை உரிமையை மீறும் பாஜக அரசின் இழிவான வழிமுறை
செல்பேசிகளில் வேவு பார்க்கும் மென்பொருள்களைப் பயன்படுத்துவது இந்தியாவில் உள்ள சட்டங்களின்படி அரசாங்கங் களே கூட செய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் எந்தச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசாங்கம் தங்கள் சொந்த குடிமக்கள் மீதே இத்தகைய உளவு வேலையில் ஈடுபட்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்திட வேண்டும். குடிமக்களின் அந்தரங்க உரிமை (right to privacy) உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால் பாஜக அரசாங்கம் இதற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்பும் இதுதொடர்பாக பல நிகழ்வுகள் நடந்துள்ளன. மனித உரிமை ஆர்வலர்களின் செல்பேசிகள் மற்றும் கணினிகளில் கள்ளத்தனமாக மென்பொருள்கள் விதைக்கப் பட்டிருக்கின்றன. பின்னர் அதன்அடிப்படையில் கொடுங்கோன்மையான சட்டங்களின்கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இத்தகைய பாசிச நடவடிக்கைகளைப் பிரயோகித்திடும் எதேச்சதிகார நடவடிக்கைகளை ஏற்க முடியாது. ‘ஊடுருவு, விதை, கைதுசெய்’ (‘snoop. Plant. Arrest’) என்னும் பாஜக அரசாங்கத்தின் இழிவான வழிமுறையானது இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.சட்டவிரோதமாகவும், அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் இந்தியக் குடிமக்கள் மீது அவர்கள் பயன்படுத்தும் திறன்பேசிகள் மற்றும் மென்பொருட்கள் மீது கள்ளத்தனமாக ஊடுருவும் இத்தகைய பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்துவது தொடர்பாக பாஜக ஒன்றிய அரசாங்கம் நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி.)