மதுரை:
விருதுநகரைச் சேர்ந்த ஆனந்தமுருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தேசியநெடுஞ்சாலை எண் 7- மொத்தம் 2 ஆயிரத்து 369 கிலோமீட்டர் நீளமுடையது. இதை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை 1 லட்சத்து 78 ஆயிரம் மரங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டியுள்ளனர். முறைப்படி இதற்கு பதிலாக 5 லட்சத்து 34 ஆயிரம் மரங்களை நட வேண்டும்.
அதே போல 2 மற்றும் 3 வது பெரிய தேசிய நெடுஞ்சாலைகளான என்எச்- 6 மற்றும் என்எச்-15-இல் பத்து லட்சம் மரங்களை நட வேண்டும். என்எச்- 68 இல் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக 7 ஆயிரத்து 214 மரக்கன்றுகளை சாலை ஓரங்களில் நட வேண்டும். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை வெட்டிய மரங்களுக்காக புதிய மரக்கன்றுகளை நட தவறிவிட்டது.இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது அறிக்கை அளவில் தான் உள்ளதே தவிரசெயல்பாட்டில் இல்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், பசுமை நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடுவதற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் எனக்கூறியிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை வழக்கறிஞர் கூறுகையில், வனத் துறையிடம் ஒப்பந்தம் செய்துள்ளோம். மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம். நாட்டு மரங்களை வளர்க்கிறோம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை மூன்று மாதங்கள் கழித்து தான் வருகிறது. இவ்வாறு சென்றால் சுற்றுச் சூழல்மிகவும் மோசமாகும். நாட்டு மரங்கள் என்னென்ன நடப்பட்டுள்ளன. என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால், பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தொடர்ந்து சென்னை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் எவ்வளவு மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளது என்பதுகுறித்து சென்னை, மதுரை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய இயக்குநர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 5- ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.