india

img

இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியுதவி.... கூகுள் நிறுவனம் அறிவிப்பு.....

புதுதில்லி:
கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய்நிதி உதவியை வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

கொரோனா 2 ஆவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 600க்கும் கூடுதலான முக்கிய மருத்துவ சாதனங்கள் அனுப்பிவைக்கப்படும் என இங்கிலாந்து நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது. அதேபோல் கொரோனா போரில் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு, கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய்நிதியுதவி  செய்ய உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,  கொரோனா பரவலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையை கண்டு மனம் கலங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவ உபகரணங்கள்  விநியோகம், மருத்துவ சேவை வழங்கி வருவோர்,இக்கட்டான சூழ்நிலையில் இருப்போர் போன்றவர்களுக்கு உதவ கூகுள் நிறுவனம் சார்பாக 135 கோடிரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.