india

img

மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் உயிர் பறிபோன விவசாயி சுசில் கஜால்.... ஹரியானா பாஜக முதல்வர் பதவி விலக வேண்டும்.... அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்...

புதுதில்லி:
வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகள் மீது காவல்துறையை ஏவி மண்டைகளை உடைத்து, விவசாயி சுசில் கஜாலின் உயிரைப் பறித்த ஹரியானா பாஜக அரசின் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் உடனடியாக பதவி விலக வேண்டுமென அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

ஹரியானா மாநிலம் கர்னால் நகரில் ஆகஸ்ட் 28 அன்று நடைபெற்ற விவசாயிகள்போராட்டத்தில் மாநில பாஜக அரசின் காவல்துறை கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. கர்னால் சார் ஆட்சியர், காவல்துறையினரிடம், “விவசாயிகளின் மண்டைகளை உடையுங்கள்” என்று பகிரங்கமாக உத்தரவு பிறப்பித்த காணொலி காட்சிகள் நாடு முழுவதுமுள்ள விவசாயிகளி டையே கொதிப்பை ஏற்படுத்தியது. அந்த உத்தரவுக்கிணங்க காவல்துறை நடத்தியதாக்குதலில் பல விவசாயிகள் படுகாயமடைந்தனர். ரத்தம் சொட்டச் சொட்ட தரையில் வீழ்ந்தபோதிலும் விவசாயிகளை காவல்துறை சூழ்ந்து கொண்டு தாக்கினர். இத்தகைய கொடூர தாக்குதலுக்குள்ளான கர்னால் மாவட்டம் கிரந்தா தாலுகா ராய்ப்பூர் 
ஜத்தன் எனும் கிராமத்தைச் சேர்ந்த சுசில் கஜால் எனும் விவசாயி காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவசாயிசுசில் கஜால் உயிரிழந்த சம்பவம் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விவசாயி சுசில் கஜால் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கர்னால் நகரில் மறுநாளே பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அணிதிரண்டு ஆவேசமிக்க போராட்டத்தை நடத்தினார்கள். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தில்லியின் எல்லைப்பகுதியில் ஒன்பது மாத காலமாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக ஹரியானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கர்னால் நகருக்குஅரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் கட்டார் வரும்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கூடியிருந்த விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய வெறியாட்டத்தின் போதுதான் விவசாயி சுசில் கஜால் கொல்லப்பட்டார்.

தலைவர்கள் நேரில் ஆறுதல்
இந்நிலையில் ராய்ப்பூர்ஜத்தன் கிராமத்திற்கு ஆகஸ்ட் 31 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் நேரில் சென்றனர். விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய நிதி செயலாளர் பி.கிருஷ்ண பிரசாத் தலைமையில் ஹரியானா மாநில விவசாயிகள் சங்க தலைவர் பூல்சிங் சியோகந்த், செயலாளர் சுமித் சிங், கர்னால் மாவட்ட தலைவர்டாக்டர் சுரேந்திர மாலிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்னால் மாவட்டச் செயலாளர் டாக்டர் அசோக் அரோரா, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜக்பால் ராணா, மாதர்சங்க மாவட்டச் செயலாளர் ஜசோரா ஆகியோர் அடங்கிய இக்குழுவினர், விவசாயத் தியாகி சுசில் கஜாலின் இல்லத்திற்கு நேரில்சென்று அவரது தாயார் மூர்த்தி தேவி, மனைவி சுதேஷ்தேவி ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். 

“சுசில் கஜால் மீது போலீசார் தாக்கியதில் அவரது பின்னந்தலை உடைந்து கடுமையான உள்காயம் ஏற்பட்டிருந்தது. கழுத்து எழும்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் வீட்டிற்கே கொண்டு வரப்பட்டார். உடனடியாக உரிய சிகிச்சை அளிக்ககாவல்துறையினர் அனுமதி மறுத்ததன் விளைவாக அவரது முகமெல்லாம் வீங்கி, தோலின் நிறம் மாறி, மிகவும் துயரமான நிலையில் இரவில் துடிதுடித்து இறந்தார்” என்று அவரது தாயாரும், மனைவியும் தலைவர்களிடம் கதறி அழுதனர். 

ஒன்பது மாக காலமாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் சுசில் கஜால். காவல்துறையின் தாக்குதலால் அவர் மரணமடைந்த செய்தி அறிந்தும், இதுவரையிலும் காவல்துறையினரோ, வருவாய் அதிகாரிகளோ, வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் எந்த வாக்குமூலத்தையும்பெறவில்லை. வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றுசுசில் கஜாலின் மனைவி தெரிவித்தார். 

உடற்கூராய்வு செய்யாமலேயே...
“சுசில் கஜால் கடுமையாக காயமடைந்தநிலையிலும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் காவல்துறையினர் தடுத்ததன் மூலம், அவரை கொடூரமாக படுகொலை செய்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறோம்” என கிருஷ்ண பிரசாத் தெரிவித்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவரின் உயிரை பாதுகாக்க முடியும் என்று தெரிந்திருந்தும், ஹரியானா காவல்துறையினர் அதை மறுத்து, அவரை கிரிமினல் தனமான முறையில் கொலை செய்துள்ளனர் என்றும் கிருஷ்ணபிரசாத் சாடினார்.“சுசில் கஜாலின் உடல் ஆகஸ்ட் 29 அன்று உடற்கூறாய்வு செய்யப்படாமல் அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கங்காராம் புனியா, சுசில் கஜால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறியுள்ளார். உடற்கூராய்வு செய்யாமல், மாரடைப்பால் தான் மரணமடைந்தார் என்று காவல்துறை எப்படி கூறுகிறது? எனவே இது உண்மையை மறைத்து, சுசில் கஜாலைஅடித்தே படுகொலை செய்த காவல்துறையினரை பாதுகாக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். விவசாயப் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்ற ஒரு செற்பாட்டாளரான சுசில் கஜால் மரணமடைந்த தகவல்கிடைத்தும் அவரது உடலை உடற்கூறா ய்விற்கு அனுப்பாமல், உண்மைகளை மறைக்கும் நோக்கத்துடனும் விவசாயிகளை எப்படியேனும் ஒடுக்கிவிடலாம் என்றஎண்ணத்துடனும் முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரும் அவரது தலைமையிலான பாஜக அரசும் செயல்படுகின்றன. இத்தகையஅரசு அதிகாரத்தில் நீடிப்பதற்கு தார்மீக உரிமையில்லை” என்றும் கிருஷ்ண பிரசாத் கூறினார். 

இச்சம்பவம் தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் பொறுப்பில் உள்ள நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விவசாயிகளின் மண்டைகளை உடையுங்கள் என்று உத்தரவிட்ட சார் ஆட்சியர் ஆயூஷ் சின்கா மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். சுசில் கஜால் தாயார் மற்றும் மனைவியிடம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ரூ.1 லட்சம் உதவி நிதியை அளித்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள், அவரது குடும்பத்தினருக்கு ஹரியானா மாநில அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமென்றும் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர். 

                                               ******************

செப்டம்பர் 25 பாரத் பந்த்...  சிஐடியு முழு ஆதரவு

மோடி அரசின் கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 25 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) ‘பாரத்பந்த்’ - முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) முழு ஆதரவு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டு மேடையான சம்யுக்த கிஷான் மோர்ச்சாவின் இரண்டு நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. 22 மாநிலங்களிலிருந்து 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாடு வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் ரத்து செய்யவலியுறுத்தியும் விளை பொருட்களுக்கான குறைந்தபட்சஆதார விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் செப்டம்பர் 25 அன்று பாரத்பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி தலைமையிலான பாஜக அரசு பின்பற்றி வரும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களையும் இதர பல்வேறு அமைப்புகளையும் ஈடுபடுத்தும் விதத்தில் சம்யுக்த கிஷான் மோர்ச்சா மேற்கொண்டுள்ள போராட்ட நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். சம்யுக்த கிஷான் மோர்ச்சாவின் இரண்டு நாள் மாநாட்டில் விவசாயிகளது பிரச்சனைகள் மட்டுமின்றி, தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவு மக்களின் பிரச்சனைகளையும் விவாதித்துள்ளனர். பொதுத்துறை தனியார்மயம், தொழிலாளர் விரோதச் சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர். 

இந்திய விவசாயத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமானதாக மாற்ற முயல்கிற, தனது கூட்டுக் களவாணி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தர முயல்கிற மோடி அரசின்
முயற்சிகளுக்கு எதிராக, எதேச்சதிகார அணுகுமுறைக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் மற்றும் இதர பகுதிமக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிட மோடி அரசு முயற்சிக்கிறது. மக்கள் போராட்டத்தை ஒடுக்குமுறையால் அடக்கிவிடலாம் என்று நினைத்தால் மோடி அரசு மிகப் பெரியதவறு செய்கிறது என்றே அர்த்தமாகும் எனவும் அவர்கள்எச்சரித்துள்ளனர்.