புதுதில்லி:
தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோர்ச்சா தில்லி எல்லைகளில் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றது. இந்த போராட்டம் திங்களன்று 102 வது நாளை எட்டியுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் தில்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, போராட்ட களங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதனால், போராட்டக் களத்துக்கு புதிதாக விவசாயிகள்வருவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், திக்ரி, காஸிப்பூர், சிங்கு எல்லைகளில் விவசாயிகள் தங்களின் டிராக்டர்களையே வீடுகளாக மாற்றி தங்கி, சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாத வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தில்லி குண்டலி எல்லையில் விவசாயிகள் மீது ஞாயிறு இரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
டி.டி.ஐ. வணிக வளாகம் அருகே நடந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் யாரும் காயம் அடையவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மர்ம நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் ஞாயிறு இரவு பதற்றம் நீடித்தது.