புதுதில்லி:
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தப்பி ஓடி தலைமறைவான சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் ஜூன் 16 அன்று தில்லியில் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இப்புகாரில் கேளம்பாக்கம் காவல்துறையினர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்தவழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையறிந்த சிவசங்கர் பாபா உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு தப்பிஓடினார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஜூன் 16 அன்றுபோலீசார் அங்கு சென்ற போது, சிவசங்கர்பாபா அங்கிருந்து தப்பி ஓடி தலைமறை வானார்.
இந்நிலையில் தெற்கு தில்லியின் காசியாபாத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சிவசங்கர் பாபாவை கைது செய்வதற்கு தில்லி போலீசாரும் உதவினர். கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தில்லி நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வர உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.