ரூ.6,970 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது. இந்த நோட்டுகளைப் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தவோ, வங்கிகளில் மாற்றவோ செய்யலாம் என அறிவித்தது. இதற்காக அவகாசமும் அளிக்கப்பட்டது.
பின்னர் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் மாற்றிக்கொள்ளவும் பல்வேறு கட்டமாக அறிவிப்புகளை வழங்கியது. அத்துடன் வங்கிக்கு திரும்பிய 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த அக்.31 ஆம் தேதி வரை வங்கிக்கு திரும்பிய 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, 98.04 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி இருப்பதாகவும், மீதமுள்ள 1.96 சதவீத நோட்டுகள், அதாவது ரூ.6,970 கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என தெரிவித்துள்ளது.