வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் சந்தேகம்!
வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் சந்தேகத்திற்குரிய வகையில் பந்துவீசியதாக கள நடுவர்கள் புகார் அளித்த நிலையில், தனது பந்துவீச்சை பகுப்பாய்வு செய்யுமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ளூர் கவுன்டி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சர்ரே அணிக்காக வங்கதேச ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹசன் விளையாடி வருகிறார். இதில் சர்ரே மற்றும் சோமர்சட் இடையிலான போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஷகிப் அல் ஹசன் மொத்தம் 63 ஓவர்கள் பந்துவீசி 9 விக்கெட்களை வீழ்த்தினார். அந்த போட்டியில் கள நடுவர்களான ஸ்டீவ் ஓ'ஷாக்னெஸ்ஸி மற்றும் டேவிட் மில்ன்ஸ் ஆகியோர் ஷகிப் அல் ஹசனின் பந்துவீச்சு சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக புகார் அளித்தனர்.
இதையடுத்து ஷகிப் அல் ஹசன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் தனது பந்துவீச்சை பகுப்பாய்வு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். தற்போது ஷகிப் அல் ஹசன் விளையாடுவதற்கு இன்னும் தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அவரது பந்துவீச்சு குறித்து சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 ஆண்டுகளாக விளையாடிவரும் ஷகிப் அல் ஹசன் இதுவரை இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கியது இல்லை. அவர் இதுவரை 447 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.