india

img

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப்பெறுக... ஜூன் 16-30 அகில இந்திய எதிர்ப்பு இயக்கம்... இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்....

புதுதில்லி:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், அத்தியாவசியப் பொருள் கள் மற்றும் மருந்துகளின் விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஜூன் 16-30ஆகிய இருவாரங்களும் அகில இந்திய எதிர்ப்பு வாரங்களாக அனுசரித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

அத்தியாவசியப் பொருள்களின் தொடர் விலை உயர்வுகள் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. கோவிட் பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்கள் மே 2 அன்று முடிவடைந்த பின்பு தொடர்ந்து 21 தடவைகள் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்தியிருக்கிறது. இது அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின் மொத்த விலைவாசிக்  குறியீட்டெண்ணை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. 

ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் விலைகள் சுமார் 5 சதவீத அளவிற்கு உயர்ந்திருக்கின்றன. பிரதான உணவுப் பொருள்களின் விலைகள் சுமார் 10 முதல் 16 சதவீத அளவிற்கு உயர்த்திருப்பதையும் பார்க்கிறோம். உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் (manufactured products) 9.1 சதவீத அளவிற்கு உயர்ந்திருக்கின்றன. இவைஅனைத்தும் சில்லரைச் சந்தைகளுக்கு வருகையில் இவற்றுக்காக நுகர்வோர் அதிக விலைகள்கொடுக்க வேண்டிய நிலையில்இருக்கிறார்கள்.
விலையும் அதிகரிப்பு; பசி பட்டினியும் அதிகரிப்பு இவை அனைத்தும், பொருளாதாரம் ஆழமான மந்தநிலைக்குச் சென்றிருக்கக்கூடிய நிலையில், வேலையின்மை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மக்களின் வாங்கும் சக்தி நிலைகுலைந்துள்ள நிலையில், மக்களின் பசி-பட்டினிக் கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில் நடந்து கொண்டிருக் கின்றன. இவற்றின் விளைவாக ஆட்சியாளர்களின் அரவணைப்புடன் மனச்சாட்சியற்ற முறையில் கறுப்புச்சந்தை வணிகமும், பதுக்கலும் நடந்து கொண்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது. கள்ளச்சந்தை வணிகத்தை, குறிப்பாக மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியத்தேவையான அத்தியாவசிய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை மோடி அரசாங்கம் கடுமையாகக் கட்டுப்படுத்திட வேண்டும்.

நாட்டில் வருமானவரி வரம்புக்குள் வராத குடும்பத்தினர் அனைவருக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு 7,500 ரூபாய் வீதம் பணம்  நேரடியாக அளித்திட வேண்டும். இதனை உடனடியாகச் செய்திட வேண்டும்.பிரதமர் மோடி, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், தீபாவளி வரை5 கிலோ உணவு தானியங்கள் அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது போதுமானதல்ல.     இது உணவு தேவைப்படும் அனைவரையும் சென்றடையாது. பருப்பு வகைகள், சமையல்எண்ணெய், சர்க்கரை, மசாலாப் பொருள்கள்,தேயிலை உட்பட உள்ள உணவுத்தொகுப்புடன் 10 கிலோ உணவு தானியங்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்றின் நிலைமைகளைப் பரிசீலனை செய்தும், தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டு, இக்கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக அடுத்த இரு வாரங்களும் மாநிலங் களில் நிலவும் துல்லிய நிலைமைகளுக்கு ஏற்ப வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அனைத்து மாநிலக்குழுக்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றன.இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.