புதுதில்லி:
மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடுவழங்குவது தொடர்பாக உயர் முன்னுரிமை கொடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவப் படிப்புகளில் அகிலஇந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்களன்று நடைபெற்றது.அப்போது ஒன்றியஅரசின் நிலைபாட்டை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப் பட்டது.இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பை தவிர்க்க ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு உயர் முன்னுரிமை அளித்து பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் மோடி உத்தரவிட் டார். இது தொடர்பாக விரைந்து முடிவெடுக்கவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.