புதுதில்லி;
எரிபொருள் மொத்த விற்பனையில் ஈடுபட ரிலையன்ஸ் உள்ளிட்ட 7 புதிய தனியார் நிறுவனங்களுக்கு ஒன்றிய எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங் களுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 7 தனியார்நிறுவனங்களுக்கும் தற்போது புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய பெட்ரோலியப் பொருள் சில்லரை விற்பனையை விரிவுபடுத்த சில புதியநிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கலாம் என நெறிமுறைகள் அளிக்கப்பட்டன. எரிபொருள் விற்பனையில் ஈடுபட விரும்பும் தனியார்நிறுவனங்கள் அனைத்தும் குறைந்ததுரூ. 250 கோடி அளவுக்கு மதிப்புள்ள தாக இருத்தல் வேண்டும் எனவும் மொத்த விற்பனை அளவு ரூ. 500 கோடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்என்று புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பெட்ரோல் விற்பனையில் ஈடுபட அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ரிலையன்ஸ் சில்லரை வர்த்தக அங்கீகாரம் தற்போது மொத்த விற்பனை அங்கீகாரமாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெட்ரோலிய ரசாயனங்கள் விற்பனை செய்ய முகேஷ் அம்பானி குழுமத்துக்கு அளித்துள்ள அங்கீகாரத்தில் மேலும் ஒன்றாக எரிபொருள் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இண்டியன் மொலாசஸ் நிறுவனம் ஏற்கெனவே எண்ணெய் மையங்களை நிர்வகித்து வருகிறது. அந்த நிறுவனத்துக்கு தற்போது எரிபொருளை விற்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரைசிறிய அளவில் பெட்ரோல் தயாரித்து சில்லரை விற்பனை செய்து வந்த இந்தநிறுவனம் இனி மொத்த விற்பனை யிலும் ஈடுபடும். அசாம் அரசு நிறுவனமான அசாம் கேஸ் நிறுவனம் எரிவாயு போக்குவரத்து வர்த்தகத்தைக் கவனித்துவருகிறது. தற்து இந்நிறுவனத்துக்கு எரிபொருள் விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம்ஆண்டு புதிதாக நிறுவப்பட்ட ‘ஆன்சைட் எனர்ஜி’ என்னும் நிறுவனத்துக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எம்.கே. அக்ரோடெக் மற்றும் மானஸ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.