திருவனந்தபுரம்:
ஏபிபி (ABP) சி-வோட்டர்ஸ் (C-Voter) நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், கேரளத்தில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கு 47 முதல் 55 வரை கிடைக்கும்; பாஜக அதிகபட்சமாக 2 இடங்களில் வெல்லலாம் என்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன், கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை, தங்களின் இலக்கு 2021 தேர்தல் அல்ல; 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்தான் என்று வாக்குப் பதிவுக்கு முன்பாகவே, தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு பேட்டி அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன், “வரும் 2021 சட்டமன்ற தேர்தல் ஆனது பாஜக-விற்கு அரையிறுதிப் போட்டியை போன்றது. இறுதிப் போட்டி என்பது 2026 சட்டமன்ற தேர்தல்தான்” கூறியுள்ளார்.
“2021 தேர்தலில் மீண்டும் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியே கூட அமையலாம். ஆனால் அதன்பின் காட்சிகள் மாறும். படிப்படியான மாற்றம் ஏற்படும்” என்று தெரிவித்துள்ள சுரேந்திரன், “ கடந்த 2016 தேர்தலில் பாஜகவிற்கு 16 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அதனை இம்முறை 20 சதவிகிதமாக உயர்த்துவதே எங்கள் இலக்கு. அதேபோல மூன்று முதல் நான்கு இடங்களைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளோம். 2026 தேர்தலில் எங்களுக்கு 35 முதல் 40 இடங்கள் வரை கிடைத்தாலே போதும் கேரளாவில் பாஜக ஆட்சி அமைந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “இது கேட்பதற்கு அபத்தமாக தோன்றலாம்; ஆனால் கட்சியை தொலைநோக்கு பார்வையுடன் வலுப்படுத்தும் வேலைகளில் தாங்கள் ஈடுபட்டுள்ளதால், விரைவில் இருதுருவ அரசியலில் ஆச்சரியப்படும் மாற்றங்கள் நிகழும்” எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஆனால், 2021 தேர்தலில் பாஜக-வின் வாக்கு சதவிகிதம் குறையும் என்று ‘ஏபிபி’ கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 16 சதவிகித வாக்குகளைப் பெற்ற பாஜக, 2019 மக்களவைத் தேர்தலில் 14.9 சதவிகித வாக்குகளை பெற்றது. அது 2021 தேர்தலில் 2.2 சதவிகிதம் சரிந்து 12.7 சதவிகிதமாக குறையும் என்று கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.