புதுதில்லி:
“புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள விவசாயிகள், தில்லியைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோ செல்லும் சாலைகளையும் விரைவில் முற்றுகையிடுவோம்” என்று அறிவித்துள்ளனர்.
தங்களின் அடுத்த குறி, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள்தான் என்றும், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து இங்கும் பாஜக-வைத் தோற்கடிக்காமல் விட மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், திங்களன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் செய்தோம். அதனால் மேற்குவங்கத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. இதேபோல அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மாநிலங்களிலும் இதே வியூகத்தை பின்பற்றுவோம். இந்த மாநிலங்களில் பாஜகவை எந்த கட்சியால் வீழ்த்த முடியுமோ, அந்த கட்சிக்கு அல்லது அணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம். நாங்கள் தில்லியில் 8 மாதங்களாகப் போராடிப் போராடிக் களைத்துப் போய்விட்டோம் என்று ஒன்றிய பாஜக அரசு கருதுகிறது. இதனால் நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிட்டு விடுவோம் என நினைக்கிறது. ஆனால், இப்போதுதான் எங்கள் போராட்டம் விரிவடைந்துள்ளது.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது. இனி எங்கள் போராட்டம் லக்னோவுக்கு செல்லும் பாதைகளை மறித்து நடைபெறும். தில்லியைப் போல், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவையும் மாற்றுவோம். அதாவது, லக்னோவுக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளையும் முடக்குவோம்.நாங்கள் பாஜக-வுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்திருக்கிறோம். இந்த தேசத்து விவசாயிகளின் ஒரு வாக்குகூட பாஜகவுக்கு விழக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
செப்டம்பர் 5-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகரில் முதலாவது மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற உள்ளது. அதில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் தேர்தல்களுக்கான வியூகம் வகுக்கப்படும்.இவ்வாறு ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.