புதுதில்லி:
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக, மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக,திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூர் ஆகியதில்லியின் 3 எல்லைகளையும் முற்றுகையிட்டு, விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இந்தப்போராட்டத்தை, மழை, குளிர், வெயில் எனஅனைத்து கால நிலைகளையும் தாண்டி விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.கொரோனா தொற்றின் 2-ஆவது அலையைக் காரணம் காட்டி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு முயற்சித்தது. கொரோனாவைப் பரப்புவதே விவசாயிகள்தான் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் போன்றவர்கள் மூலம் அவதூறு பிரச்சாரமும் செய்தது. ஆனால், கொரோனாவைக் காட்டிலும் மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்சட்டங்கள் ஆபத்தானவை என்பதால், அதனைஒழித்துக்கட்டும் வரை என்ன பழிபோட்டாலும், சொந்த ஊர்களுக்குத் திரும்பப் போவதில்லை என்று அறிவித்தனர். எங்களின் உண்மையான வாழ்வா, சாவா? போராட்டம் கொரோனாவுடன் அல்ல; மூன்று வேளாண்சட்டங்களுடன்தான் என்றும் அவர்கள் கூறிவிட்டனர்.
இந்நிலையில்தான், தங்களின் போராட்டம் 6 மாதத்தை எட்டியதைத் தொடர்ந்து, நாடுதழுவிய கறுப்புத் தினம் கடைப்பிடித்த விவசாயிகள், தில்லி எல்லைகளிலும் புதனன்றுகறுப்புத் தலைப்பாகையுடன் போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். அப்போது, பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:‘விவசாய சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெறாதவரை, நாங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை. மத்தியஅரசு கொரோனாவைக் காட்டி விவசாயிகளை அச்சுறுத்துகிறது. கொரோனா பரவல்குறித்து உண்மையாகவே அவர்களுக்கு கவலை இருந்தால், விவசாய சட்டங்களைதிரும்பப் பெறட்டும். நாங்களும் உடனடியாகபோராட்டத்தை ரத்து செய்து விடுவோம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கும் தயாராகவே உள்ளோம். விவசாயிகள் ஒன்றும் கொரோனா வைரஸைப் பரப்புபவர்கள் அல்ல. நாங்கள் உணவளிக்கும் விவசாயிகள். நாங்கள் அளிக்கும் உணவுதான் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தருகிறது. ஆனால், மத்திய அரசோ முகக்கவசம், கிருமி நாசினி, மருந்துப் பொருட்களைக் கூட எங்களுக்கு வழங்க மறுக்கிறது. விவசாயிகள் பிரச்சனைகள் மட்டுமல் லாது, அனைத்து விஷயங்களிலுமே மத்தியஅரசு இன்று தோல்விடைந்து இருக்கிறது.இவ்வாறு ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.