india

img

விமர்சனங்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுகிறது மோடி அரசு... ‘நியூஸ் 18 நெட்வொர்க்’கிலிருந்து நீக்கப்பட்ட கார்ட்டூனிஸ்ட் மன்சுல் வேதனை....

 புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான பாஜக அரசு,விமர்சனங் களை தாங்கிக்கொள்ள முடியாமல், மேலும்மேலும் சகிப்புத்தன்மை அற்றதாகமாறிக் கொண்டிருக்கிறது; அரசைவிமர்சிப்போர் மீது அடக்குமுறை யை ஏவுகிறது என கார்ட்டூனிஸ்ட்மன்சுல் வேதனை தெரிவித்துள்ளார்.“தனது வாழ்நாளில் இதுபோன்றதொரு மோசமான அரசை பார்த்ததில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.மன்சுல், மிகவும் பிரபலமான அரசியல் கார்ட்டூனிஸ்ட் ஆவார். பலஆண்டுகளாக பத்திரிகைத்துறையில் பணியாற்றிவரும் அவர், எந்தவொரு ஆட்சியின்போதும், அதன் நிர்வாக சீர்கேடுகளை தனது கார்ட்டூன்களில் விமர்சிக்கத் தவறியதில்லை. அந்த வகையில்தான், கொரோனா தொற்றைக் கட்டுப் படுத்துவதில் மோடி அரசின் செயலற்ற தன்மையையும், மக்கள் கொத்துக் கொத்தாக சாகும்போது, அதன் ஆமைவேக நடவடிக்கைகளையும் கடுமையாக சாடினார்.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை சேர்ந்த ‘நியூஸ் 18 நெட்வொர்’-க்கில்அலுவல்பூர்வமாக பணியாற்றினாலும், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் தனதுகார்ட்டூன்களை வெளியிட்டு வந்தார். அவற்றின் நையாண்டிகளுக்காக பலரும் அந்த கார்ட்டூன்களை தங்கள் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.குறிப்பாக, கொரோனா நெருக்கடி காலத்தில் மோடி அரசின் செயல் பாட்டை விமர்சித்து மன்சுல் வரைந்தகார்ட்டூன்களுக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில்தான், ‘டுவிட்டர்’ நிறுவனம், மன்சுலின் டுவிட்டர் கணக்கிற்கு கடந்த ஜூன் 4 அன்று இ-மெயில் ஒன்றை அனுப்பி வைத் தது. அதில், “உங்கள் டுவிட்டர் கணக்கான ‘அன்மன்சுல்டூன்ஸ்’ (ANMANJULtoons) தொடர்பாக இந்திய சட்ட அமலாக்கத்திடமிருந்து நாங்கள் ஒரு கோரிக்கையைப் பெற்றுள்ளோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் பதிந்த டுவீட்டின் உள்ளடக்கம், இந்திய சட்டத்தை மீறுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அரசின் இந்த கோரிக்கையின்படி நாங்கள் உங்கள் மீது நடவடிக்கைஎடுக்கவில்லை என்றாலும், பயனர்களின் கணக்கிலிருக்கும் உள்ளடக்கத்தை அகற்ற அங்கீகரிக் கப்பட்ட நிறுவனத்திடமிருந்து (சட்டஅமலாக்கம் அல்லது ஒரு அரசு நிறுவனம் போன்றவை) சட்டப்பூர்வ கோரிக்கையைப் பெற்றால் அதை சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு அறிவிப்பது டுவிட்டர் நிறுவனத்தின் கொள்கை” என்று கூறியுள்ளது.

மேலும், “அரசின் கோரிக்கையை மதிப்பீடு செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், நீங்கள் விரும்பினால், உங்கள் நலன்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை (பதிவை தாங்களாகவே நீக்குவது அல்ல அரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்) எடுத்துக் கொள்வதற்காகவும் இதனை தெரிவிக்கிறோம் என்றும் விளக்கி இருந்தது.இந்த மின்னஞ்சலை தனது சுயவிவரத்தில் பகிர்ந்த மன்சுல் அதை ‘ஜெய் ஹோ மோடி ஜி கி சர்க்கார் கி!’ (அனைவரும் மோடி அரசை வாழ்த்துகிறார்கள்...) என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார்.

மேலும், அவர் “எந்த டூவீட் சிக்கலை உருவாக்கியது என்று அரசாங்கம் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக் கும்” என்றும் கிண்டல் அடித்திருந் தார்.ஆனால், இதுநடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, அம்பானியின் ‘நியூஸ் 18 நெட்வொர்க்’ நிறுவனம் கார்ட்டூனிஸ்ட் மன்சுலை, திடீரென இடைநீக்கம் செய்தது. கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் ‘நியூஸ் 18 நெட்வொர்க்’கில் பணியாற்றி வந்த நிலையில், திடீரென நீக்கப்பட்டது மன்சுலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னணியில் ஒன்றிய அரசின்அழுத்தம் இருக்கிறது என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை.இந்நிலையில்தான், ‘தி குவிண்ட்’ (The Quint) இணையதளத்திற்கு மன்சுல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “டுவிட்டரில் இருந்து வந்த அறிவிப்பைக் கண்டபோதே நான் அதிர்ச்சியடைந்தேன். எனதுமுழு வாழ்க்கையிலும் இதுபோன்றஅறிவிப்புகளை நான் ஒருபோதும் பெறவில்லை. எந்தவொருஅரசாங்கமும்அதன்மீதானவிமர்சனத்தை விரும்புவதில்லை என்பது வெளிப்படையானதுதான், ஆனால் தற்போதைய அரசாங்கம்எந்தவொரு விமர்சனத்தையும் எதிர்ப்பையும் விரும்புவதில்லை என்பது மட்டுமல்ல, அவற்றைஅடக்குகிறது. இத்தகைய செயல்கள் இதற்கு முன்பு இருந்தது இல்லை.

முந்தைய யுபிஏ-வின் 10 ஆண்டுகளில், பிரதமரையும் மற்றவர்களையும் விமர்சிப்பதை நிறுத்துமாறு ஒருமுறை கூட அரசாங்கத்திலிருந்தோ அல்லது எந்தவொரு ஆசிரியரிடமிருந்தோ என்னிடம் யாரும் சொல்ல முயற்சிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கார்ட்டூன்களில் நையாண்டியை உட்பொதிப்பது ஆகும். இவற்றிலெல்லாம் அரசாங்கம் தலையிடக் கூடாது. எங்கள் குரல்களை அடக்குவதற்கு பதிலாக, அவர்கள் தொற்றுநோயை சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ள மன்சுல், “சமூகம் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பும் வரை கலை (கார்ட்டூன்கள் போன்ற ஓவியக் கலைகள்) பாதுகாப்பாக இருக்கும். ஒரு சமூகம் கண்களைமூடிக்கொண்டால், கலை வாழ முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.