india

img

கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு தேசத்தையே விற்கும் மோடி அரசு.... சிஐடியு கடும் கண்டனம்....

புதுதில்லி:
தேசத்தின் சொத்துக்களை ஒட்டுமொத்தமாக சூறையாடும் நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்தான் மிகவும் கயமைத்தனமான, கிரிமினல்தனமான “தேசிய பணமாக்கல் திட்டம்” (National Monetisation Pipeline - NMP) என்று இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) சாடியுள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு அகிலஇந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் நாட்டின் மதிப்புமிக்க, உற்பத்தி வளமிக்க, உயிர்நாடியான செயல்பாட்டு கட்டமைப்புகளாக திகழ்கிற - பலலட்சக்கணக்கான கோடி ரூபாய்கள்பெறுமான சொத்துக்களை யெல்லாம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு விற்றுத் தீர்ப்பது என்ற மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கைக்கு இந்திய தொழிற்சங்கமையம் (சிஐடியு) கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

ஊழல் கரைபுரளும்; பொருளாதாரம் அழியும்
இந்த திட்டம், சர்வதேச நிதி மூலதனத்தால் இயக்கப்படுகிற நவீன தாராளமயக் கொள்கையின் அடுத்த மிகப்பெரிய நடவடிக்கை யாகும். தேசிய பணமாக்கல் திட்டம் என்பது, பொதுச் சொத்துக்களை தனியார் கைகளுக்கு மாற்றிவிடும்போது மிகப்பெரும் அளவிற்கு ஊழல் கரைபுரண்டு ஓடுவதற்கான திட்டமே ஆகும். இது தேசத்தின் பொருளாதாரத்தை அழித்தொழிக்கும் ஒரு திட்டமாகும். தொழிலாளர்களுக்கும் உழைக்கும்மக்களின் இதர பல்வேறு பகுதி மக்களுக்கும் தாங்க முடியாத அளவுக்கு துன்பங்களை கொண்டு வரும் திட்டமாகும்.ஆகஸ்ட் 23 அன்று ஒன்றியநிதி அமைச்சரால் அறிவிக்கப் பட்டுள்ள தேசிய பணமாக்கல் திட்டமானது, 26,700 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளைதனியார் கார்ப்பரேட் கூட்டுக்கள வாணி கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் மோசமான அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த சாலைகளின் மதிப்பு ரூ. 1.6லட்சம் கோடி ஆகும். அதேபோல 400 ரயில் நிலையங்கள் மற்றும் 150 ரயில்கள் (ரூ.1.5லட்சம் கோடி); 42,300 மின் திட்ட கிலோமீட்டர் தூரம் மின்சார பகிர்மான லைன்கள் (ரூ.0.67லட்சம் கோடி); 5ஆயிரம் மெகாவாட் நீர்மின், சூரிய மின் மற்றும் காற்றாலை மின்சாரஉற்பத்தி சொத்துக்கள் (ரூ.0.32  லட்சம் கோடி ); 8ஆயிரம் கிலோமீட்டர் தூரமுள்ள தேசிய இயற்கை எரிவாயு பைப்லைன்கள் (ரூ.0.24லட்சம் கோடி); 4ஆயிரம் கி.மீ. இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் பைப்லைன்கள் (ரூ.0.22 லட்சம் கோடி); பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு கோபுரங்கள் (ரூ.0.39லட்சம் கோடி); 21 விமானநிலையங்கள் மற்றும் 31 துறைமுகங்கள் (ரூ.0.34லட்சம் கோடி); 160 நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் (ரூ.0.32 லட்சம் கோடி); மற்றும்2 விளையாட்டு மைதான ஸ்டேடியங்கள் (ரூ.0.11லட்சம் கோடி) உள்ளிட்ட மாபெரும் சொத்துக் களை தனியார் கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகளுக்கு தாரைவார்க்க இருக்கிறார்கள். 

நாசகர நடவடிக்கை
ஒட்டுமொத்தமாக ரூ.6லட்சம் கோடி அளவிற்கான தேசிய வளங்களை தனியாருக்கு விற்பது என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் உயிர்நாடியாகத் திகழ்கிற அடிப்படைக் கட்டமைப்பு சொத்துக்களை யெல்லாம் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்காக அடிமாட்டு விலைக்கு அள்ளித் தருகிற ஒரு திட்டமிட்ட நாசகர நடவடிக்கையே ஆகும். இதேபோல அடுத்தடுத்து பல திட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டுவர இருக்கிறார்கள்.

பகிரங்க சூறையாடல்
ஒன்றிய நிதி அமைச்சரும், நிதி ஆயோக் அமைப்பும் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் வளர்ப்பதற்காகவே இத்தகைய விற்பனையை மேற்கொள்வதாக கூறியிருப்பது முற்றிலும் மோசடியானது. அவர்கள் கூறுவதற்கு மாறாக இது, தங்களது தனியார் கார்ப்பரேட் எஜமானர்கள் கொழுத்தவருமானம் ஈட்டுவதற்காகத்தான் இந்த மாபெரும் தேசிய அடிப்படைக் கட்டமைப்பு சொத்துக்களை விற்க இருக்கிறார்கள்; அந்தஎஜமானர்கள் இந்த நிறுவனங் களில் எந்தவொரு சிறு மூலதன நிதியும் செலவழிக்காமல் பெரும் லாபத்தை ஈட்டப்போகிறார்கள். இது தேசத்தின் வளங்களை பகிரங்கமாக சூறையாடுவதைத் தவிர வேறல்ல. 

அடிப்படை கட்டமைப்பு சார்ந்ததுறைகளில் முதலீடுகள் செய்வதற்கு பதிலாக, வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், தேசிய பணமாக்கல் திட்டத்தின் வழியாக பெரும் நிறுவனங்களை தங்கள் வசப்படுத்துகிறார்கள்; தேசத்தின் அடிப்படை கட்டமைப்பு சொத்துக்களாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை பணமாக்குகிறோம் என்ற பெயரில் நடக்கும் இந்த சுரண்டலின் மூலமாக மிகப்பெரும் அளவிலான செல்வம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு மடைமாற்றப்படுகிறது. 

அரசுத் தரப்பில் முதலில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சலுகைகள் அறிவிக்கப்படுவது உறுதி. கடந்த கால அனுபவங்கள் இதைத்தான் காட்டுகின்றன. முதலில் வெளியிட்ட அறிவிப்புக்கு தனியாரிடமிருந்து ஆதரவு கிடைக்கப் பெறவில்லை என்று கூறி, சொத்துக்களை வாங்குவோரை ஈர்ப்பதற்காக விதிகளை மேலும் தளர்த்தி புதிய புதிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என்று தெரிகிறது.

சொத்துக்களை பாதுகாக்க ஒன்றுபடுவோம்
ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய தேசவிரோத திட்டத்தை கடுமையாக கண்டனம் செய்வதற் கும், உறுதியாகப் போராடி தேசத்தின் சொத்துக்களை பாது காப்பதற்கும், வெளிநாட்டு மற்றும்உள்நாட்டு ஏகபோகங்களின் கைகளுக்கு இந்த சொத்துக்கள் அவர்களது அடிவருடி ஆட்சியாளர்களால் ஒப்படைக்கப்படா மல் இருப்பதை உறுதி செய்திடவும்  நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றுபட்டு குரல் எழுப்பிட சிஐடியு அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

                     **************

போராட்டத்தை பல மடங்கு தீவிரப்படுத்துவோம்...  சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு அழைப்பு... 

தேசத்தின் சொத்துக்களை விற்கும் மோடி அரசைக் கண்டித்தும் பொதுத்துறை மற்றும் அரசுத்துறை சொத்துக்களை பாதுகாக்க போராட்டத்தை பல மடங்கு தீவிரப்படுத்துவோம் என்று மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சிஐடியு அழைப்பு விடுத்துள்ளது.
 இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

ஒன்றிய அரசு, பொதுத்துறை மற்றும் அரசுத்துறை சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், பங்குகளை விற்று தனியாரை உரிமையாளராக்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறது. 1990-க்குப் பிறகு தாராளமயக் கொள்கை திணிக்கப்பட்டதிலிருந்து படிப்படியாக இது வேகம் பெற்றது. வாஜ்பாய் ஆட்சியின் போது பொதுத்துறை பங்கு விற்பனைக்கு என்றே தனித்துறை உருவாக்கப்பட்டு அருண்சோரி என்பவர் அமைச்சராக்கப்பட்டார்.கடந்த 30 ஆண்டுகளில் தொழிலாளர்களும், பொதுமக்களும் பல போராட்டங்களை நடத்தி இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார்கள்.  பயன்படுத்தப்படாத நிலங்கள், சொத்துக்கள் என்ற வகைப்பாட்டில் துறைமுகம், நாடாளுமன்றக்கட்டிடம் உட்பட எதை வேண்டுமானாலும் காசாக்குவார்கள்.இவ்வளவு கேடுகெட்ட,தேச விரோத உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் அடிவருடித்தனமான அரசின் நடவடிக்கையை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.தனியார்மய முயற்சிகளை எதிர்த்து ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் நடத்தி வருகிற போராட்டங்களை பல மடங்கு தீவிரப்படுத்தி நடத்த வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களும் இதற்காக எடுக்கிற முன்னெடுப்புகளை வெற்றிப்படுத்த எழுக என தொழிலாளர்களையும் அனைத்துத்தரப்பு மக்களையும் சிஐடியு அழைக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.