india

img

தில்லி வன்முறையை முறையாக விசாரணை செய்யாத விவகாரம்... தில்லி போலீசார் மீதான கீழமை நீதிமன்றத்தின் கண்டனங்களை தள்ளுபடி செய்திட உயர்நீதிமன்றம் மறுப்பு.....

புதுதில்லி:
வட கிழக்கு தில்லியில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின்போது புலன்விசாரணையை முறையாகச்செய்யாத தில்லிக் காவல்துறையினர் மீது தில்லியில் உள்ள அமர்வு நீதிமன்றம் ஒன்று கடும் கண்டனங்களை தெரிவித்து,  25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. 

இவற்றுக்கு எதிராக தில்லிக் காவல்துறையினர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த னர். இவற்றின்மீது பதிலளித்திட கீழமைநீதிமன்றத்திற்கு அறிவிப்பு அனுப்பியுள்ள உயர்நீதிமன்றம், கீழமை நிதிமன்றம் தில்லிக் காவல்துறையினர் மீது தெரிவித்த  கண்டனங்களை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது.புதுதில்லியில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வட கிழக்குப் பகுதியில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றது. அப்போது தில்லிக் காவல்துறை வெறியாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதும், சம்பவத்தில் காயமடைந்த முஸ்லிம்கள் மீதே வழக்குப் பதிவு செய்ததும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அளித்த முறையீடுகளை முறையாக விசாரணை செய்யாமல் ஓரங்கட்டி யதும் அப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.முகமது நசீர் என்பவர் வன்முறையாளன் ஒருவனால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அந்தக் குண்டு அவரது கண்களை உரசிக்கொண்டுசென்றது. இவ்வாறு காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் தன் முழு முகவரியையும் மருத்துவமனையில் அளித்திருந்தார். மருத்துவமனை நிர்வாகம் இவ்வழக்கை மருத்துவ சட்ட வழக்காகப் (MLC-Medicolegal case) பதிவுசெய்து, பாதிக்கப்பட்டவரின் முழு முகவரியுடன் காவல்துறையினருக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்திருந்தது. எனினும் காவல்துறையினர் இவர் மீது ஏவப்பட்ட வன்முறை வெறியாட்டம் குறித்து மருத்துவமனையிலிருந்து வந்த புகாரின் அடிப்படையில், முகமது நசீரை விசாரித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திடவில்லை. இவ்வாறு செய்யாதது மட்டுமல்ல, முகமது நசீரை வேறொரு வழக்குடன் இணைத்து நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த கீழமை நீதிமன்ற அமர்வு நீதிபதி,  தில்லிக்காவல்துறையினர், துப்பாக்கியால் சுடப்பட்ட முகமது நசீர் மீதான சம்பவம்தொடர்பாக புலன்விசாரணை செய்வதில் மிகவும் “மோசமான முறையில்” தோல்வி அடைந்துவிட்டதாகக் கருத்து தெரிவித்திருந்ததுடன், அவ்வாறு நடந்துகொண்ட காவல்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும், அந்தத் தொகையை தில்லி சட்ட சேவைகள் அதிகாரக்குழுமத்திடம் (Delhi Legal Services Authority) ஒப்படைத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.  இவற்றுக்கு எதிராகத்தான் காவல்துறையினர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதனை புதனன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், இதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்திற்கு அறிவிப்பு அனுப்பிய அதே சமயத்தில், கீழமை நீதிமன்றம் காவல்துறையினருக்கு எதிராக அளித்திட்ட கண்டனக் கணைகளைத் தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். அபராதம் கட்டுவதற்கு மட்டும் அடுத்த வாய்தா தேதியான செப்டம்பர் 13 வரை அனுமதி அளித்துள்ளார். காவல்துறையினர் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, காவல்துறையினரின் பிரதான மனக்குறையே தங்கள் மீதான கண்டனங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதே யாகும் என்றார்.துப்பாக்கிக்குண்டுக்கு ஆளான முகமது நசீர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தங்கள் கட்சிக்காரர் காவல்துறையினரால் வழக்கைத் திரும்பப்பெற்று க்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுக்கொண்டிருப்பதால், வழக்கை குறுகிய காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டார்.(ந.நி.)