புதுதில்லி:
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு ரூ. 20 ஆயிரத்து 706 கோடியாக அதிகரித்துள்ளது.சுவிஸ் வங்கிகளில் தனி நபர்கள் மற்றும்நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 2019-ஆம் ஆண்டில் ரூ. 6 ஆயிரத்து 625 கோடியாக இருந்தது. இது 2020-இல் ரூ. 20 ஆயிரத்து 706 கோடியாக அதிகரித்துள்ளது.
இத்தகவலை ஸ்விட்சர்லாந்தில் உள்ள தேசிய வங்கி (எஸ்என்பி) தெரிவித்துள்ளது.கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவாக நிதி அளவு அதிகரித்துள்ளது என அந்தவங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது. இதில், சேமிப்பு மூலம் திரட்டப்பட்ட தொகை ரூ. 4 ஆயிரம் கோடி. பிற வங்கிகளில் மாற்றப்பட்ட தொகை ரூ. 3 ஆயிரத்து100 கோடி. அறக்கட்டளை அல்லது நம்பகமானவர்கள் மூலமாக போடப்பட்ட நிதி ரூ. 16கோடியே 50 லட்சம். பத்திரங்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 13 ஆயிரத்து 500 கோடி.சுவிட்சர்லாந்து தேசிய வங்கிக்கு பிற வங்கிகள் அனுப்பிய தகவலில் இந்தியர்கள் கறுப்புப் பணமாக முதலீடு செய்ததொகை எவ்வளவு என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, சுவிஸ் வங்கிகள் வாடிக்கையாளருக்கு திரும்ப அளிக்க வேண்டிய பொறுப்புதொகையின் அளவு என்று மட்டுமே சுவிஸ்தேசிய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனி நபர் மூலம் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் திரட்டிய சேமிப்புஇது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியர்கள் மேற்கொள்ளும் முதலீடுகளை தாங்கள் கறுப்புப் பணமாகக் கருதவில்லை என தொடக்கத்தில் இருந்தே கூறும்சுவிஸ் அரசு, இருப்பினும் இந்தியா மேற்கொள்ளும் வரி ஏய்ப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளது.2018-ஆம் ஆண்டில் இந்தியா - சுவிஸ் இடையே ஏற்பட்ட தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்குவைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் சுவிஸ் அரசு அளித்தது. ஒவ்வொரு ஆண்டும் இதேபோல விவரங்களை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இங்கிலாந்து முதலிடத்திலும், இரண்டாமிடத்தில் அமெரிக்காவும் உள்ளது. சுவிஸ் வங்கியில் பணம் போட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 51-வது இடத்தில்உள்ளது. இந்தியாவை விட நியூஸிலாந்து, நார்வே, சுவீடன், டென்மார்க், ஹங்கேரி, மொரீஷியஸ், பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.